- உருதுக்கவிதை உலகு – 1
- உருதுக்கவிதை உலகு – 2
- உருதுக் கவிதை உலகு – 3: மீர்ஸா காலிப்
- உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’
- உருதுக் கவிதை உலகு – 5 மீர் தாகி மீர்
- உருதுக் கவிதை உலகு – 6 ஹஸ்ரத் மோஹானி
- உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி
- உருதுக் கவிதை உலகு – 8: அல்லாமா இக்பால்
- உருதுக் கவிதை உலகு – 9: குல்ஸார்
- உருதுக் கவிதை உலகு 10: அக்பர் இலாஹாபாதி
- உருதுக் கவிதை உலகு 11 – அதா ஜாஃப்ரி
- உருதுக் கவிதை உலகு: 12 – ஷகீல் பதாயுனி
எழுத்தாளர் இரா. முருகன் அவர்கள் இந்தியாவில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு ‘மன் தடப்பத் ஹரி தர்ஷன்கோ ஆஜ்‘ என்னும் பக்திப் பாடலை முன்னிறுத்துவார். பைஜு பாவ்ரா என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பக்திப் பாடலை உருவாக்கியவர்கள் மூன்று இஸ்லாமியர்கள். நௌஷாத் அலி இசையமைக்க, முகமது ரஃபி பின்னணி பாட, ஷகீல் பதாயுனி இப்பாடலை எழுதினார்.
இத்திரைப்படத்தில் பக்திப் பாடல்கள் அதிகமாக இருப்பதால், அதன் இயக்குநர் விஜய் பட் அன்றைய காலகட்டத்தில் தேசபக்திப் பாடல்கள் எழுதுவதில் முன்னணியில் இருந்த கவி பிரதீப் அவர்களைப் பாடல் எழுத வைக்கும் எண்ணத்தில் இருந்தார். இசையமைப்பாளர் நௌஷாத் இயக்குநரிடம் ஷகீல் பதாயுனியின் பாடல்களை ஒருமுறை கேட்கச் சொல்ல, அவரும் சம்மதிக்க, பைஜூ பாவ்ராவின் மேற்சொன்ன புகழ்மிக்க பக்திப் பாடல் நௌஷாத் – ரஃபி – ஷகீல் கூட்டணியில் உருவாகி, இன்றைக்கும் இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நிலைத்துள்ளது.
நௌஷாத் + ஷகீல் பதாயுனியின் கூட்டணியில் இந்தித் திரையின் முக்கியமான கிருஷ்ண ஜெயந்திப் பாடலும் உருவானது. முகல்-ஏ-ஆஸம் திரைப்படத்தின் தொடக்கக் காட்சிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக ஜோதா பாயின் அரண்மனையில் நடக்கும் நடனத்தில் ‘மோஹெ பன்ஹட்மேன் நந்தலால் சேடு கயோ ரே’ பாடல் இடம்பெற்றது. பின்னாளில் இப்பாடல் தொடர்பாக ஒரு சர்ச்சையும் வெளியானது. இப்பாடலை ரகுநாத் ப்ராஹ்ம்பட் முகல்-ஏ-ஆஸம் வெளியாகும் முன்பே குஜராத்தி திரைப்படத்திற்கு எழுதியதாக வழக்கு தொடரப்பட்டு வெற்றியும் பெற்றார். முதலில் பாடலை எழுதியவராக ஷகீலின் பெயரும், பிறகு அதன் கவிஞராக ரகுநாத்தின் பெயருடனும் நிலைத்து இந்தித் திரையில் வரலாற்றை உருவாக்கியிருக்கும் பாடல் ‘மோஹெ பன்ஹட்மேன்’.
இந்த ஒரு சர்ச்சையால் ஷகீல் பதாயுனியின் பக்திப் பாடல் வரிசைக்கு எந்த இழுக்கும் நேர்ந்துவிடவில்லை. கரானா திரைப்படத்தில், ரவியின் இசையமைப்பில் ‘ஜெய் ரகுநந்தன் ஜெய் சியாராம்’ என்னும் பக்திப் பாடலும், ஷபாப் திரைப்படத்தில், நௌஷாதின் இசையமைப்பில், உஸ்தாத் அமீர் அலிகானின் குரலில் ‘தயா கர் ஏ கிரிதர் கோபால்’ என்னும் பக்திப் பாடலும், அமர் திரைப்படத்தில், நௌஷாதின் இசையில், ரஃபியின் குரலில் ‘இன்சாஃப் கா மந்திர் ஹை ஏ’ பக்திப் பாடலும் இன்னும் சில பக்திப் பாடல்களும் ஷகீலின் பக்திப் பாடல் எழுதும் திறனுக்குச் சாட்சியங்களாக நிற்கின்றன.
ஷகீல் என்றால் பக்திப் பாடல்கள் மட்டுமா? அதே முகல்-ஏ-ஆஸத்தின் ‘பியார் கியா தோ டர்னா கியா’ (காதல் கொண்டேன் அஞ்சிடுவேனோ) பாடலும் அவர் எழுதியதுதான். காதல் பாடல்களின் பட்டியலில் கட்டாயம் இடம்பெறும் ‘சௌத்வீன் கா சாந்த் ஹோ’ (முழு நிலவா), ‘மேரே மெஹபூப் துஜே’ (என் காதலியே உன்னை) ஆகியவையும் அவர் எழுதியவைதான்.
‘குல்’ – முழுதும், ‘குல்லியாத்’ – அனைத்துக் கவிதைகளும் என்னும் பெயரில் கவிஞர்களின் தொகுப்புகளை வெளியிடுவது உருதுப் பதிப்புலகில் மரபு. குல்லியாத்-ஏ-இக்பால் என்றால் இக்பாலின் கவிதைத் தொகுப்பு. அதைப் போல ‘குல்லியாத்-ஏ-ஷகீல்’ என இரண்டு தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. மொத்தமாகப் பதினோரு நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவையல்லாமல் ஷகீலின் கவிதைகளைப் பற்றி மற்றவர்கள் எழுதிய மூன்று நூல்களும் வெளியாகியிருக்கின்றன. அனைத்தும் உருது மொழியில் வெளியானவை.
இந்தித் திரையில் எண்பத்தொன்பது திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியிருக்கும் ஷகீல், கஜல் யாப்பில் பல கவிதைகளை எழுதியிருக்கிறார். ஷகீலின் கஜல்கள் சிலவற்றைப் பார்ப்போம்:
// வாழ்பவர்கள் நீதிக்கு அஞ்சுகின்றனர்
விஷமருந்திவிட்டு மருந்துக்கு அஞ்சுகின்றனர் //
// ஜீனே வாலே கஸாசே டர்த்தே ஹைன்
ஸஹ்ர் பீக்கர் தவாசே டர்த்தே ஹைன் //
ஐந்து கண்ணிகள் உடைய சிறிய கஜல் இது. அளவடியும் குறைவான சீர்களைக் கொண்டவை. அஞ்சுதல் என்னும் இயைபைக் கொண்டு உருவான ஐந்து கண்ணிகளும் வாழ்க்கையின் முரணைப் பேசுபவை.
நல்லவர் இவ்வுலகில் உள்ளதை நினைக்காமல், கார்மேகம் சூழ்ந்தால் அஞ்சுகின்றனர். எதிரியின் கொடுமையை ஏற்பவர்கள், நண்பர்களின் நன்றிக்கடனுக்கு அஞ்சுகின்றனர். போராட்டக் குணமிருந்தும் ‘ஷகீல்’, காதலிக்கத் தொடங்க அஞ்சுகின்றனர்.
நீண்ட அளவடிகளைக் கொண்ட கஜலாக,
// உலகத்தோரே! என்னைக் குடிகாரனென நினைக்காதீர்
நான் குடிப்பதில்லை; புகட்டப்பட்டேன்
உணர்வின்றிக் கால்கள் எங்கு தள்ளாடுகின்றனவோ
அதுவே எனக்குப் பாதையாகக் காட்டப்பட்டது //
// முஜே துனியா வாலோ ஷராபி நா சம்ஜோ
மைன் பீத்தா நஹீன் ஹூன்; பிலாயி கயி ஹை
ஜஹான் பெகுதிமேன் கதம் லடுகடாயே
வஹி ராஹ் முஜ்கோ திகாயி கயி ஹை //
நீண்டு தொடரும் இந்த கஜலில் உலகத்தின் மாயையும், நடிப்பையும், வேடத்தையும் மதுவென எழுதியிருப்பார். உலகின் இயல்பு தன்னலம் மட்டுமே என்னும் கருத்தைப் பாடுகின்ற இந்த கஜலை ஷகீல் பின்னாளில்தான் எழுதியிருக்க வேண்டும். ஏனென்றால், தொடக்கத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளில் பெரும்பான்மையான கவிதைகளின் போக்கு சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக இருந்தது; ஷகீலின் கவிதைகள் காதலைப் பேசின. அப்படிக் காதலைப் பேசுவது கவிதைகளுக்காக மட்டுமல்ல, தன் வாழ்க்கையும் அப்படித்தான் என அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ரோஜா முட்களுக்கு நடுவே இருக்கிறது. அதைச் சிறையெனச் சிலர் சொல்வர், அரணெனச் சிலர் சொல்வர், முட்களைத் தவிர்த்து மலரை மட்டும் கொய்யச் சிலர் நினைப்பர். அனைத்துக் கற்பனைகளிலும் மலரும் முள்ளும் ஒன்றாக இருப்பினும், முள்ளைத் தவிர்த்து மலரைத் தொடுவது குறித்தே அனைவரும் தங்கள் பார்வையை முன்வைப்பர். ஆனால், ஷகீல் முள்ளைத் தன்னுடன் வைத்திருப்பதைப் பூக்கள் செய்யும் அரசியல் என்கிறார்.
// மேலாடை கிழிந்துவிடாமல் முட்களைக் கடக்கிறேன்
பூக்களின் அரசியலை அறியாதவன் அல்லன் நான் //
// காண்ட்டோன்சே குஸர் ஜாத்தாஹூன் தாமன் கோ பச்சாக்கர்
ப்ஹூலோன் கி சியாசத்சே மைன் பேகானா நஹீன் ஹூன் //
“இவ்வுலகின் நடைமுறைகளை அறிந்தவன் நான், என்னைப் பித்தனென நினைத்துத் துன்புறுத்தாதீர்” எனத் தொடங்கும் கஜலின் கண்ணிகளுள் ஒன்று மேலே சொல்லப்பட்ட ‘பூக்களின் அரசியல்’ கவிதை.
கவிதைகளிலும் உரையாடல்களிலும் பயன்பாட்டில் இருக்கும் ‘ஸமானா‘ (zamana) என்னும் சொல் உலகம், தலைமுறை, காலகட்டம், பருவம், கால அளவு எனப் பல பொருள் கொண்டு வரும். ‘உலகம் என்ன சொல்லும்?’ என உருதுவில் கேட்கையில் அதில் ‘உலகம்’ என்னும் சொல் ‘ஸமானா’ எனக் குறிப்பிடப்படும். பழைய காலம் என்னும் பயன்பாட்டில் ‘ஸமானா’ பழகிவரும். அந்த ‘ஸமானா’வை மீட்டெடுப்பதற்காக ஷகீல் தன் காதலியிடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறார்.
அவனும் அவளும் இப்போது தங்கள் முதுமையில் இருக்கலாம், ஊடலில் இருக்கலாம். முதுமைக்கோ ஊடலுக்கோ வரும் முன் அவர்கள் இருவரும் இன்பியல் நிறைந்த ஒரு கணத்தைக் கடந்திருக்க வேண்டும். அந்தக் கணம் இப்போது அவனுக்கு மீண்டும் தேவைப்படுகிறது. அவன் கடந்துபோன அந்தக் கணத்தை மீட்டெடுக்க நினைக்கிறான். அந்தக் கணம் மீட்டெடுக்கப்பட வேண்டுமென்றால், அவனுக்கு அந்தக் கணத்தில் நடந்தவை அனைத்தும் மீண்டும் நடக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அவன் அவளிடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறான்.
// நீ மீண்டும் அதே ஒயிலுடன் சோம்பல் முறித்துப் புன்னகை செய்
கடந்து சென்ற காலம் திரும்பி வந்துவிடும் //
// தும் ஃபிர் உசி அதாசே அங்க்டாயி லேக்கே ஹன்ஸ்தோ
ஆஜாயேகா பலட்கர் குஸ்ரா ஹுவா ஸமானா //
அங்க்டாயி – சோம்பல் முறித்தல். உருதுவில் பெண் சோம்பல் முறித்தல் ஒயிலின் இலக்கணமாகக் கவிதைகளில் வழங்கப்படுகிறது. தமிழிலும் அப்படிச் சோம்பல் முறித்தலை ஒயிலாகச் சொல்லும் வழக்கம் உள்ளதா எனத் தேட வேண்டும். கலிங்கத்துப் பரணியின் கடை திறப்பில், ஆண்டாள் திருப்பாவையில், கம்பராமாயணம் – சுந்தரகாண்டத்தில் அந்தப்புரக் காட்சிகளில் எங்கேனும் யாரேனும் சோம்பல் முறிக்கிறார்களா எனத் தேடிப் பார்க்கும் ஆர்வத்தை ஷகீலின் இந்தக் கவிதை தூண்டுகிறது.
ஷகீலும் இசையமைப்பாளர் நௌஷாதும் இருபத்து நான்கு ஆண்டுகள் இந்தித் திரையில் பணியாற்றினர். நௌஷாதுடன் மட்டுமல்லாது ரவி, எஸ்.டி. பர்மன், சி. ராமச்சந்திரா, ஹேமந்த் குமார், ரோஷன் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுக்கும் அவர் எழுதிய பாடல்கள் புகழ்பெற்றவை.
முகல்-ஏ-ஆஸம் திரைப்படத்தின் ‘பியார் கியா தோ டர்னா கியா’வையும் ‘மோஹெ பன்ஹட்மேன்’னையும் தொடர்ந்து அத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு கஜலையும் காணலாம். அதுவும் நீண்ட அளவடிகளைக் கொண்ட கஜல்.
சலீம், பட்டத்து இளவரசன்; அனார்கலியிடம் காதல் வயப்பட்டிருக்கிறான். அவனுக்குக் காதலில் இருக்கும் வலிகளும் வேதனைகளும் புரியவில்லை. காதலித்தால் சில வலிகளை வாழ்நாள் முழுதும் சுமக்க வேண்டிய நிலையும் வரலாம் என்னும் உண்மை அவனுக்குப் புரியவில்லை. அனார்கலியிடம் தான் கொண்ட காதலைத் தவிர வேறு எதுவும் அவனுக்கு முக்கியமாகத் தெரியவில்லை. அந்தச் சூழலில், அவனுக்குக் காதலின் இன்னொரு பக்கத்தை நடனத்துடன் இயைந்த பாடலால் ஒரு நடன நங்கை விளக்குகிறாள்.
ஷகீலின் கஜல், நடனப் பாடலாக வெளிப்படுகிறது.
// இந்தக் காதலை உலகத்தார் வீணாக உயர்த்திப் பேசுகின்றனர் //
கஜலின் பல்லவியும் சரணங்களுமான ‘ஷேர்’ எனப்படும் இரண்டடிகளுள் முதல் அடி ஒரு தகவலாகவோ அல்லது கேள்வியாகவோ ஒலிக்கும். இரண்டாம் அடிதான் விடையாகவும் ஒலித்து, முதலடியையும் தன்னுடன் சேர்த்துக் கவிதையாக்கும். இந்த கஜலிலும் முதல் அடி ஒரு தகவலாக ஒலிக்கிறது.
// சலங்கையின் வலியை உணர்வதில்லை; அதன் ஒலியை மட்டும் பேசுகின்றனர் //
இந்த இரண்டாம் அடிதான் தானும் கவித்துவமாகி ஒலித்து, முதலடியில் தகவலாக ஒலிப்பதைக் கவிதையாக்கி உயர்த்துகிறது.
// ஏ இஷ்க் ஏ சப் துனியாவாலே பெகார் கி பாத்தேன் கர்த்தே ஹைன்
பாயல்கி கமோன்கா இல்ம் நஹீன் ஜங்கார்கி பாத்தேன் கர்த்தேன் ஹைன் //
‘சலங்கையின் வலியைப் புரிந்துகொள்ளாத மனிதர்கள்தான் அதன் ஓசையைப் புகழ்ந்து பேசுகின்றனர்; போலவே காதலை அறியாத மனிதர்கள் வீணாக அதை உயர்த்திப் பேசுகின்றனர்’ என்னும் தொடக்க அடிகளைக் கொண்ட அந்தக் கஜலில், காதலால் காயப்படாத மனிதனே இல்லை என்னும் பொருள் கொண்ட வரிகளின் அமைப்பும் இயைபும் சிறப்பு.
// ஒவ்வோர் இதயத்திலும் அம்பு பாய்ந்துள்ளது
ஒவ்வொரு காலையும் சங்கிலி பிணைத்துள்ளது
காதலை உயர்த்திப் பேசும் மனிதரிடம்
வலிகளின் சுகத்தையும் பேசச் சொல்லுங்கள் //
// ஹர் தில்மேன் சுப்பா ஹை தீர் கோயி
ஹர் பாவ்ன்மேன் ஹை ஜன்ஜீர் கோயி
பூச்சே கோயி இன்சே கம்கி மஸா
ஜோ பியார் கி பாத்தேன் கர்த்தேன் ஹை //
நிலைத்த புகழுக்குரிய பாடல்களையும் கஜல்களையும் எழுதிய ஷகீல் தன்னுடைய ஐம்பத்து மூன்றாவது வயதில், 1970ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.
2009ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் மாண்புமிகு மாயாவதியின் வாழ்த்துடன் ஷகீலைக் கௌரவிக்கும் மலர் அரசு சார்பில் வெளியிடப்பட்டது. 2013ஆம் ஆண்டில் தபால் தந்தித் துறை தபால்தலை வெளியிட்டது.
எப்போதெல்லாம் முகல்-ஏ-ஆஸத்தின் ‘பியார் கியா தோ டர்னா கியா‘ பாடல் ஒலிக்கிறதோ, சௌத்வீன் கா சாந்தின் ‘சௌத்வீன் கா சாந்த் ஹோ’ ஒலிக்கிறதோ, மேரே மெஹ்பூபின் ‘மேரே மெஹபூப் துஜே’ ஒலிக்கிறதோ அப்போதெல்லாம் ஷகீல் பதாயுனி நினைவுக்கு வருவார்.
பீஸ் சால் பாத் என்னும் திரைப்படத்தில் ஷகீலின் வரிகள்:
// பே கரார் கர்க்கே ஹமே யூன் நா ஜாயியே
ஆப்கோ ஹமாரி கசம் லௌட்டு ஆயியே //
// என்னை இப்படித் தவிக்கவிட்டுச் செல்லாதே
உனக்கு என் மீது ஆணை, திரும்பி வா! //
யார் அழைத்தாலும் சென்றவர் திரும்பப்போவதில்லை, ஷகீலும்தான்.
(தொடரும்)