- உருதுக்கவிதை உலகு – 1
- உருதுக்கவிதை உலகு – 2
- உருதுக் கவிதை உலகு – 3: மீர்ஸா காலிப்
- உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’
- உருதுக் கவிதை உலகு – 5 மீர் தாகி மீர்
- உருதுக் கவிதை உலகு – 6 ஹஸ்ரத் மோஹானி
- உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி
- உருதுக் கவிதை உலகு – 8: அல்லாமா இக்பால்
- உருதுக் கவிதை உலகு – 9: குல்ஸார்
- உருதுக் கவிதை உலகு 10: அக்பர் இலாஹாபாதி
- உருதுக் கவிதை உலகு 11 – அதா ஜாஃப்ரி
- உருதுக் கவிதை உலகு: 12 – ஷகீல் பதாயுனி
- உருதுக் கவிதை உலகு: 14 – ராஹத் இந்தூரி
- உருதுக் கவிதை உலகு: 14 – இப்ராகீம் ஸவுக்
கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷா ஸஃபரின் காலம் உருதுக் கவிஞர்களின் பொற்காலம். மன்னரே கவிஞராக இருந்ததும், அரசவையில் கவிதைகள் பாடப்பட்டதும், மன்னர் முன்னிலையில் அரசவைக் கவிஞர் தலைமையில் அரண்மனையில் கவியரங்கங்கள் நடந்ததும், கவிஞர்கள் அரசின், மன்னரின் செயல்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டதுமாகக் கவிஞர்கள் அரசுக்கு நெருக்கமாக இருந்தனர். மன்னர் ஸஃபர், மீர்ஸா காலிப், மூமின் கான் மூமின், தாக் தெஹல்வி எனக் கவிஞர்கள் சூழ் நிலமாக அன்றைய தில்லி கவிதைகளை வளர்த்தது. கவிதை வளம் செழித்த அச்சூழலில் அரசவைக் கவிஞராக இருந்தவர் ஷேக் மொஹம்மத் இப்ராகீம் ‘ஸவுக்’. இதில் ‘ஸவுக்’ என்பது அவருடைய புனைபெயர்.
// வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ள
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள // – ஏழையும் பணக்காரனும் மண்ணுக்குள்தான் என வைரமுத்து தத்துவம் எழுதினார். மண்ணுக்குள் செல்லும்போது ஏழையும் பணக்காரனும் சமம்தான் என ஸவுக் எழுதினார்.
// எத்தனை வறியவர் ஆயினார்
எத்தனை செல்வந்தர் ஆயினார்
மண்ணுக்கு உள்ளே சேர்கையில்
இருவரும் சமமாய் ஆயினர் //
// கித்னே முஃப்லிஸ் ஹோகயே
கித்னே தவாங்கர் ஹோகயே
காக்மேன் ஜப் மில்கயே
தோனோன் பராபர் ஹோகயே //
ஸவுக் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் அல்லர். முகலாயப் படை வீரரின் மகனாகப் பிறந்து, எளிய முறையில் இஸ்லாமிய மார்க்கக் கல்வி கற்பிக்கும் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தவர். அங்கிருந்து தொடங்கிய கவிதை ஆர்வமும், மொழித்திறனும், ஈடுபாடும் உழைப்பும், நட்பு வட்டமும் அவரை அரசவைக் கவிஞராக உயர்த்தின.
அவருடைய மார்க்கக் கல்வி ஆசிரியர் ‘ஷவுக்‘ ஒரு கவிஞர். மார்க்கம் பயிலச் சென்றவர் கவிதைகளால் ஈர்க்கப்படுகிறார். இயல்பிலேயே கவிதை எழுதும் ஆற்றலை ஸவுக் பெற்றுள்ளதை ஆசிரியர் அடையாளம் கண்டு ஊக்குவிக்கிறார். தன்னுடைய புனைபெயர் ‘ஷவுக்’கின் இயைபாக ஒலிக்கும் ‘ஸவுக்’கை அவருக்குப் புனைபெயராகப் பரிந்துரைக்கிறார். மார்க்கம் பயிலச் சென்ற ஷேக் மொஹம்மத் இப்ராகீம், தனக்கு ‘ஸவுக்’ என்னும் புனைபெயரைப் பெற்றுக் கவிஞராகிறார். அங்கிருந்து தொடங்கியது ஸவுக்கின் கவிதைப் பயணம்.
இறக்கை முளைத்ததும் கிளி பறக்கும் என்னும் இயற்கையின் நியதி ஸவுக்கின் முன்னேற்றத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் காணப்பட்டது. ஷவுக்கிடம் புனைபெயரைப் பெற்ற அவர், தான் எழுதிய கஜல்களை இன்னொரு கவிஞரிடம் காட்டுகிறார். அதில் இருக்கும் கவித்துவத்தையும் மொழி வளத்தையும் கண்ட அவர், ஸவுக்கைத் தனது சீடராக ஏற்கிறார். தனிக்கவியரங்கங்கள், அரசவைக் கவியரங்கங்கள் என தில்லியில் கவிதை செழித்த அந்தக் காலகட்டத்தில் அவர் தனிக்கவியரங்கங்களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கிறார்.
ஸவுக் புகழடைவதை அவருடைய அன்றைய குரு விரும்பவில்லை. குருவை மிஞ்சிய சீடனாக அவர் மாறியதும் வெளியே அனுப்பப்படுகிறார். அவை பகதூர் ஷா ஸஃபர் இளவரசராக இருந்த நாள்கள். இளவரசராக இருந்தபோதே கவிதையில் ஆர்வம் கொண்டிருந்த ஸஃபர், தனக்குக் கவிதை கற்றுத் தர ஆசிரியரையும் அமர்த்தியிருந்தார். அந்த ஆசிரியரின் வழியாக அரசவைக் கவியரங்கங்களில் கவிதை பாடும் வாய்ப்பு ஸவுக்கிற்குக் கிடைக்கிறது. அரசவைக் கவியரங்கங்களிலும் அவர் தடம் பதிக்கிறார்.
இளவரசருக்குக் கவிதை கற்பிக்கும் ஆசிரியருக்கு அரசவையில் கிடைத்த பதவி உயர்வு, ஸவுக்கை இளவரசருக்குக் கவிதை ஆசிரியராக்குகிறது. அதன் பின்னர், இளவரசர் பகதூர் ஷா ஸஃபர் மன்னராக முடிசூட்டப்பட்ட பின், ஷேக் மொஹம்மத் இப்ராகீம் ஸவுக் அரசவைக் கவிஞராகிறார். முதல் இந்திய விடுதலைப் போருக்கு மூன்றாண்டுகளுக்கு முன், 1854இல் தான் இறக்கும் வரையில் அரசவைக் கவிஞராக இருந்தார். அவருக்குப் பின் அவருடைய போட்டியாளராகவே முன்வைக்கப்பட்ட மீர்ஸா காலிப் அரசவைக் கவிஞரானார்.
இந்தத் தொடரில் ‘மீர்ஸா காலிப்‘ பகுதியில் எழுதப்பட்டதை இன்னொரு முறை நினைவுகூர்கிறோம். ஸவுக்கிற்கும் மீர்ஸா காலிபுக்கும் போட்டி கடைசி வரையில் இருந்தது. அரசவைக் கவிஞர், அவையில் தலைமைக் கவிஞர், மன்னனின் அவைக்குறிப்பை எழுதுபவர் எனப் பல வகையில் மன்னனுக்கு நெருக்கமான ஸவுக் தன் பரிவாரங்களுடன் வீதியில் வரும்போது அவரைக் கேலி செய்யும் விதமாக,
// மன்னனுக்கு நெருக்கமானவன் தன்னைக் காட்சிப்படுத்தி உலவுகிறான் //
// ஹுவா ஹை ஷா கா முசாஹிப் ஃபிரேஹைன் இத்ராதா //
என முதல் அடியை மீர்ஸா காலிப் பாடுகிறார். அதனைக் கேட்டுச் சென்ற ஸவுக், மீர்ஸா காலிபை அவைக்கு அழைத்து, அந்தக் கவிதையைப் பாடச் சொல்கிறார். அரசவையென்பதால் மீர்ஸா காலிப் தன்னையே கேலிப்பொருளாக்குகிறார்.
// மன்னனுக்கு நெருக்கமானவன் தன்னைக் காட்சிப்படுத்தி உலவுகிறான்
இல்லையெனில் காலிபின் புகழென்று எதைச் சொல்வீர் //
// ஹுவா ஹை ஷா கா முசாஹிப் ஃபிரேஹைன் இத்ராதா
வகர்னா ஷஹர்மேன் காலிப் கி ஆப்ரூ கியாஹை //
விடாமல் கவிதையைத் தொடரச் சொல்கிறார் ஸவுக். மீர்ஸா காலிப் அற்புதமான கஜலாக அதனைத் தொடர்கிறார்.
// நரம்புகளில் ஓடுவதையும் திரிவதையும் நான் ஏற்பதில்லை
விழிகளில் தெறிக்காதிருப்பின் குருதியென எதைச் சொல்வீர்? //
இந்தக் காட்சி ‘மீர்ஸா காலிப்’ என்னும் தொலைக்காட்சித் தொடரில் உள்ளது. மீர்ஸா காலிபாக நஸீருத்தீன் ஷாவும் ஸவுக்காக ஷஃபி இனாம்தாரும் நடித்தனர். இத்தொடரை எழுதி இயக்கித் தயாரித்தவர் கவிஞர் குல்ஸார்.
மார்க்கக் கல்வி பயின்ற அவர், // என் அழுகை ஆறாகப் பெருகின் வானகமும் வழிவிடும் // என்னும் பொருளுள்ள கஜலில் தன்னுடைய இறையச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
// மது அருந்தியதால் நான் இறைமறுப்பாளனாக மாறினேனா?
ஒன்றரை உள்ளங்கை நீர் இறையச்சத்தை வழித்தோடுமா? //
// ஜாஹித் ஷராப் பீனே சே காஃபிர் ஹுவா மைன் கியூன்
கியா தேட் சுல்லு பானிமேன் ஈமான் பஹ்கயா //
சூஃபியிசச் சிந்தனையில் பாடல்களை எழுதியிருக்கும் ஸவுக்கின் பின்னணி தெரியாமல் தனியாகப் படித்தால், மது அருந்துவதை நியாயப்படுத்துவது போலத் தோன்றுபவை அந்த இரண்டடிகள்.
கவிதைகளிலிருந்து பிரித்து எடுத்துத் தனியாகச் சொல்லும்போது இன்னொரு பொருளை உணர்த்தும் வாக்கியம், முழுக் கவிதையின் தொடர்ச்சியாக இருக்கையில் இன்னொரு பொருளை உணர்த்தும்.
எடுத்துக்காட்டாக, பாரதியின் கவிதையிலிருந்து // மெல்லத் தமிழினி சாகும் // என்னும் வரிகளை மட்டும் எடுத்துச் சொல்லும்போது ஒரு பொருளும், // மெல்லத் தமிழினி சாகும்… என்றந்தப் பேதை உரைத்தான் // எனத் தொடரும் வரிகளையும் உடன் சொல்லும்போது இன்னொரு பொருளும் இருப்பதைப் போல, இந்த கஜலின் இரண்டடிகள் தனியாகப் பார்க்கையில் மது அருந்துவதைச் சொல்வதாகவும், முழு கஜலுடன் பார்க்கையில் அழுகை ஆறாகப் பெருகுவதைக் காட்டும் சூஃபியிச கஜலின் இடையில் பருகுவதின் குறியீடாக அது அமைவதையும் காணலாம்.
சூஃபியிசக் கவிஞர்களின் வரிசையிலும் ஸவுக் முக்கியமானவர்.
// இன்றைய குழப்பத்தால் இறந்துவிட நினைக்கிறோம்
இறந்த பின்னும் நிம்மதியின்றேல் எங்கு செல்வோம்? //
// அப்தோ கப்ராக்கே ஏ கஹ்த்தேஹைன் கி மர் ஜாயேங்கே
மர்கே பி சைன் நாபாயாத்தோ கிதர் ஜாயேங்கே //
எனத் தொடங்கும் சூஃபியிச கஜலில் ‘மதரசாவிலிருந்து வழிமாறிய மதபோதகரை மதுச்சாலைக்கு அழைத்து வா, மரியாதை செய்வோம்’ என்னும் பொருள் தருகின்ற கடைசி அடிகளை எழுதியிருப்பார். கஜலுடன் ஒலிக்கையில் வாழ்க்கையின் நிலையாமையைப் பேசும் அடிகள், தனியாக ஒலிக்கையில் மதபோதகரை மதுச்சாலைக்கு அழைக்கும் பொருளில் ஒலிக்கும்.
சூஃபியிசமும் புகழாஞ்சலிகளும் பாடிய ஸவுக், ஏமாற்றத்தையும் தன் கஜல்களில் எழுதியிருக்கிறார்.
// மின்னல் தாக்கி எப்போதோ என் கூட்டை எரித்துவிட்டது
இருந்த சாம்பலைப் புயற்காற்று வீசியெடுத்துப் போனது //
// பர்க் மேரா ஆஷியான் கப்கா ஜலாகர் லேகயி
குச் ஜோ காக்கிஸ்தார் பச்சா ஆந்தி உடாகர் லேகயி //
பண்டித மொழி – மக்கள் மொழி என்னும் பாகுபாடு அனைத்து மொழிகளுக்கும் பொது. அகராதியின் துணையின்றிப் படிக்க இயலாத அளவுக்கு மொழிப்புலமை வெளிப்படும் நடையும், எளிதாக அனைவருக்கும் புரியக்கூடிய மொழிநடையும் எப்போதும் பேசுபொருளாக இருக்கும். ஸவுக் அதற்கு விதிவிலக்கானவர் அல்லர். நீண்ட காலமாக ஸவுக் பகதூர் ஷா ஸஃபருடன் இருந்ததனால், அவரும் ஸஃபரைப் போலவே எளிமையான கவிதைகளை எழுதியதாக ஆய்வாளர்கள் நினைக்கின்றனர். அவரது காலத்தில் எளிமையானதாகக் கருதப்பட்ட மொழி, காலப்போக்கில் எளிமையாகத் தோன்றாமற் போனது.
இன்றைய மொழிப் பயன்பாட்டில் ஸவுக்கின் கவிதைகளைச் சராசரி வாசகனால் அகராதியின்றி அணுக முடியாது. அவருடைய சமகாலக் கவிஞர்களான மீர்ஸா காலிப், பகதூர் ஷா ஸஃபர், மீர் தாகி மீர் அனைவரையும் இதே நேர்க்கோட்டில் அணுகலாம். ஆனாலும், ஆய்வாளர்களின் பார்வை ஸஃபர் எளிய மொழியில் எழுதியதாகக் கொள்கிறது.
எளிய மொழியில் கவிதை என்பது மக்களிடம் கவிதையை எடுத்துச் செல்லும் வழி.
இன்னொரு பார்வையில், ஸவுக் – காலிப் விட்டுச்சென்ற போட்டியைத் தொடர்வது போல, காலிபின் அளவுக்கு ஸவுக்கின் கவிதைகள் இக்காலத்தில் பேசப்படவில்லை என்னும் கருத்தை முன்வைக்கின்றனர். அது ஆய்வுக்கு உட்படுத்தி அணுகவேண்டிய கருத்து. காலிபின் கவிதைகள் இன்றும் மேற்கோள் காட்டப்படுவதைப் போல, ஸவுக்கின் கவிதைகளும் மேற்கோள் காட்டப்படுகின்றன. குறிப்பாக, தொடக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்ட ‘மண்ணுக்குள்ளே அடங்குகையில் இருவரும் சமம்’ கவிதையைச் சொல்லலாம். இருப்பினும், காலிபுடன் ஸவுக்கை ஒப்பிட்டுப் பேசுவது தொடர்கிறது.
போலவே, ஸவுக் வாழ்ந்த இடம் தில்லியில் அடையாளமற்றுப் போனதும், காலிபின் மாளிகை இன்னும் பழைய தில்லியின் பல்லிமாரான் பகுதியில் தன் மூச்சைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதும் கண் முன்னே நிற்கும் வரலாறு. ஸவுக்கின் சமாதியும் மறக்கப்பட்டு அதன் மீது பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டது. 2000ஆம் ஆண்டில் நீதிமன்றம் தலையிட்டு, இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் அந்த இடம் கொண்டு வரப்பட்டு, ஸவுக்கின் நினைவாக அங்கு ஒரு சலவைக்கல் பதிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களின் பார்வை அதன் மீது இருப்பதால், அந்தப் பகுதி பூட்டிவைக்கப்பட்டதையும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதையும் செய்தித்தாள்கள் பதிவு செய்தன.
நினைவிடம் காலத்தால் மறக்கப்பட்டும் நினைவூட்டப்பட்டும் இருந்தும் இல்லாமலும் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருப்பினும், உருது இலக்கியத்தில் ஷேக் மொஹம்மத் இப்ராகீம் ஸவுக்கின் இடம் நிரந்தரம்.
// இதயத்தைத் துளைத்திருக்கும் அம்பினை
எங்ஙனம் பிடுங்குவேன்?
அம்பும் வெளியேறாது; இதயமும் வெளியேற்றாது //
// நிக்காலூன் கிஸ்தராஹ் சீனேசே அப்னே தீர்-ஏ-ஜானான் கோ
நா பைகான் தில்கோ சோடே ஹை, நா தில் சோடே ஹை பைகான் கோ //
= ஷேக் மொஹம்மத் இப்ராகீம் ஸவுக் (C1789/1790-1854.
(தொடரும்)