Home நாவல்அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 18: கருணையின் ஊற்று 

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 18: கருணையின் ஊற்று 

by Iyappan Krishnan
0 comments
This entry is part 59 of 60 in the series அசுரவதம்

இலங்கை மக்கள் இதுவரை அறிந்திராத சோகத்தையும் அழிவையும் கண்ணெதிரே கண்டனர். உயிர்களின் அழிவு எண்ணிக்கை மிகக் குறைவுதான் என்றாலும் இலங்கை வாழத் தகுதியில்லாத நரகமாக மாறியிருந்தது. வானில் ஊழிக்கால மேகம் கறுத்து எங்கும் பரவியது போல, இலங்கையின் வானை முற்றிலுமாக விழுங்கியிருந்தது மாபெரும் புகைமண்டலம்.

வானில் பறக்கும் பறவைகள் ஏதுமின்றி, பகல் நேரத்திலேயே ஒரு நள்ளிரவின் மயக்கத்தை அந்த நகரம் சூடிக்கொண்டது. காற்றில் கருகிய விலங்குகளின் வாடையும், பொசுங்கிய மரங்களின் நெடியும் கலந்து மூச்சைத் திணறடித்தன. எரியும் கட்டிடங்களிலிருந்து வெடித்துச் சிதறிய கரிய துகள்கள், கருப்பு நிறப் பனிப்பொழிவைப் போல அசோகவனத்தின் பலவகையான மலர்கள் மீதும், பச்சிலைகள் மீதும் மெல்ல மெல்ல உதிர்ந்து கொண்டிருந்தன.

அசோகவனம் மட்டும் அமைதியாக இருந்தது. அந்த அமைதிக்கு நடுவே, சீதை ஒரு பாறையின் மீது சலனமற்று அமர்ந்திருந்தாள். அவளருகே, நடப்பவற்றை நம்ப முடியாமல் திகைத்து அமர்ந்திருந்தாள் திரிசடை. இருவரது கண்களும் வானில் திரண்டிருக்கும் அந்தப் புகைமூட்டத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

திரிசடை சீதையை உற்று நோக்கினாள். சிறைப்பட்ட ஒரு கைதி தன் எதிரியின் நகரம் எரிவதைக் கண்டால் அவள் அகம் மாபெரும் மகிழ்ச்சியடையும். தன்னைத் துன்புறுத்தியவர்கள் துடிதுடிப்பதைப் பார்க்கும்போது அந்த மனம் ஒரு அற்பமான குரூர திருப்தியைக் கொள்ளும். தனக்கு வந்த வலியைக் காட்டித் துடிக்கும் அதே மனம், எதிரிக்கு வரும் வலியை ரசிக்கப் பழகிவிடுகிறது. இதைத்தான் திரிசடை இதுவரை கண்டிருக்கிறாள்.

ஆனால், சீதையின் கண்களில் எந்த வெற்றியின் களிப்பும் இல்லை. மாறாக, அவளது விழிகளின் ஓரத்தில் கண்ணீர்த்துளிகள் துளிர்த்து நின்றன.

“அம்மா, தங்களின் கண்களில் கண்ணீர்! இது ஐயனின் பிரிவால் வந்ததோ, இல்லை தங்களின் சிறைத் துயராலோ வந்தது இல்லை என எண்ணுகிறேன்,” என்றாள் திரிசடை.

“திரிசடை.. திரிசடை..”

சீதை விம்மத் தொடங்கினாள்.

ஒரு மாபெரும் நிலநடுக்கத்தை வேர்களில் உணர்ந்த மெல்லிய கொடியைப் போல அவளது தேகம் நடுங்கியது. எரியும் இலங்கையின் வலியைத் தானே சுமப்பது போல, தன் நெஞ்சின் மீது இரு கரங்களையும் குறுக்காக இறுக்கி வைத்துக்கொண்டு தவித்தாள்.

“இது எவ்வளவு பெரிய அழிவு! எத்தனை உயிர்கள் இப்போது பலியாகியிருக்கும்?” என்றாள். திரிசடையின் கண்களும் பனித்தன. அது சீதையின் கருணையை எண்ணிக் கலங்கியது.

“பேராசையும் காமமும் கொண்ட ஒருவனின் செருக்குக்கு, எந்தப் பிழையும் செய்யாத எளிய மக்களின் ஆன்மாவும், வாழ்வும் ஏன் விலையாக வேண்டும்? ஒருவனின் தன்னிச்சையான செயல்களால் பகடைக்காய்களாக உருளுவது இந்தச் சாமானிய மனிதர்கள்தானே!” என்ற சீதையின் கைகளைப் பற்றிக்கொண்டு—

“அன்னையே, நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? இது அவர்கள் செய்த பாவத்திற்கான கூலி. இராவணனின் ஆணவத்திற்கான தண்டனை,” என்றாள் திரிசடை சற்று வருத்தத்தோடு.

சீதை மெல்லத் தலையசைத்தாள்.

“இல்லை திரிசடை, பாவம் செய்தது இராவணன். அதற்கான தண்டனையை அவன் போர்க்களத்தில் அறத்தின் நாயகன் மூலமாகப் பெறுவான். ஆனால், தொட்டிலில் தூங்கும் குழந்தை என்ன பாவம் செய்தது? வீதிகளில் விளையாடும் அந்தச் சிறுவர்கள் என் இராமனுக்கு என்ன தீங்கு செய்தார்கள்?” திரிசடை மௌனித்தாள்.

சீதையை நினைக்கும் போது திரிசடையின் உள்ளம் விம்மியது.

“திரிசடை… துயரம் எந்த மொழியில் அழுதாலும் கண்ணீரின் உப்பு ஒன்றுதான் திரிசடை! அங்கே எரியும் தீயில் ஒரு அரக்கி தன் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு மாரடித்து அழுதால், அந்த வலியின் பெயர் அரக்கத்தனமல்ல; அது தாய்மை. அந்தத் தாய்மை வதைபடுவதை எந்த அறமும் கொண்டாடக் கூடாது.”

சீதையின் அந்த வார்த்தைகளில் எந்தப் போலித்தனமும் இல்லை. அறம் என்பது தனக்குச் சாதகமாக நடக்கும்போது மட்டும் கொண்டாடுவதல்ல; எதிரியின் வலியிலும் தன் இரக்கத்தைக் காட்டுவதுதான் உண்மையான அறம்.

தான் இதுவரை மானுட வடிவில் கண்ட இவள், உலகைக் காக்கும் மாதேவி; உயிர்கள் வணங்க வேண்டிய கருணையின் ஊற்று. இவள் மானிட வடிவில் இருக்கிறாள்; ஆனால் இவள் உள்ளம் இறையின் உன்னத உச்சம் என்பதைத் திரிசடை உணர்ந்தாள்.

“அம்மா, தங்களின் வலியைப் புரிந்துகொண்டேன். அரசன் பாவம் மக்களைச் சேரும் என்பது விதி. அரசனின் வெற்றியிலும் செல்வத்திலும் மகிழ்ந்த மக்கள் அவன் பாவத்திலும் பங்கேற்க வேண்டும். மேலும் நீங்கள் கவலைப்படுவது போல எல்லாரும் அழிந்துவிடவில்லை. அரசர் உடனடி தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். தன் புஷ்பக விமானத்தில் இருந்து கட்டளையிட்டு, எளிய மக்களின் பகுதிகளைக் காப்பாற்றப் படைகளை அனுப்பினார். பெருமளவு மக்கள் காப்பாற்றப்பட்டுவிட்டனர்.”

“நல்லது,” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட சீதை, சட்டென்று ஒன்றை நினைவுகூர்ந்து, வருத்தத்துடன் வினவினாள்.

“திரிசடை, உங்களின் குடில் அழியவில்லை என்று சுற்றியிருக்கும் பெண்கள் பேசிக்கொண்டார்கள்,” என்றாள்.

அதைக் கேட்டதும் திரிசடையின் கண்களில் ஒரு புதிய அச்சம் குடிபுகுந்தது.

“அதுதான் இப்போது மாபெரும் சாபமாக மாறிவிட்டது தாயே,” என்றாள் திரிசடை உடைந்த குரலில்.

சீதை குழப்பத்துடன் அவளை உற்று நோக்கினாள்.

“மகளே, வீழ்ச்சியை ஒப்புக்கொள்ள முடியாத மனம், பழியைச் சுமக்க எப்போதும் ஒரு முதுகைத் தேடும். எங்களின் குடில் அழியாததில் அரசர் இராவணனுக்கு வருத்தம். கூடவே எங்களை அவர் சந்தேகப்படுகிறார்,” என்று சொல்லிக்கொண்டே சீதைக்காக வனத்துப் பழங்களைக் கொண்டுவந்து நீட்டினாள் திரிசடையின் தாய் சரமை.

சீதை இப்போது நிலவரத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கினாள்.

திரிசடை தொடர்ந்தாள்: “அதிகாரம் என்பது ஒரு சுழல் தாயே. அது தன்னை மையமாக வைத்தே அனைத்தையும் அளக்கும். தான் தோற்றதோடு, தன் கோட்டையும் அழிந்துவிட்டது என்பதைப் பெரியப்பாவின் செருக்கு கொண்ட மனத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.”

“அதனால்..”

“அதனால் தன் தோல்விக்கான காரணத்தைத் தேடுகிறார். புதிதாக உள்நுழைந்த வானரத்திற்கு என் தந்தை விபீஷணன்தான் உதவியிருக்க வேண்டும் என்பது அவரின் முடிவு,” என்ற திரிசடையின் கண்களில் விரக்தி தெரிந்தது.

“அந்தச் சந்தேகத்துக்கு உரமாக உங்கள் குடில்கள் எரியாதது மாறிவிட்டது, அதுதானே?” என்றாள் சீதை.

“ஆம் தாயே. சபையில் அந்த வானரத் தூதனைக் கொல்லத் தடுத்ததை ஒரு மாபெரும் சாட்சியாக அரசர் முன்னிறுத்துகிறார்.”

திரிசடை சொல்லச் சொல்ல, சீதையின் கண்முன்னே ஒரு மாபெரும் அரசியல் சிதைவு உருவாவது தெரிந்தது.

“மகளே, செருக்கு மிகுந்த மனம் ஒரு கண்ணாடியைப் போன்றது. அதில் விரிசல் விழுந்துவிட்டால், அது தன் பிம்பத்தை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள அனைவரின் பிம்பங்களையும் சிதைத்தே காட்டும். இராவணனின் அகங்காரக் கண்ணாடி இன்று சுக்குநூறாக உடைந்துவிட்டது. இப்போது அவன் தன் நிழலைக் கூட நம்பத் தயாராக இல்லை,” எனச் சரமை தொடர்ந்தாள்.

“அரசவையில் என்னவரின் குரல் எப்போதுமே ஒரு முரண்பட்ட குரல்தான். மற்ற அசுரர்கள் இராவணனின் தவறுகளுக்குத் தாளம் போட்டபோது, இவர் மட்டும் நியாயத்தின் குரலாக ஒலித்ததை அங்கே யாரும் விரும்பியதில்லை. அதிகாரம் எப்போதுமே தன் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவனை உள்ளூர வெறுக்கும். அந்த வெறுப்புக்கு இன்று ‘தேசத்துரோகம்’ என்ற சாயம் பூசப்பட்டுவிட்டது,” என்று முடித்தாள் சரமை.

“இப்போது விபீஷணன் என்ன செய்துகொண்டிருக்கிறார்?” சீதையின் குரலில் ஒரு ஆழ்ந்த கவலை வெளிப்பட்டது.

“எனக்குத் தெரியவில்லை தாயே. ஆனால் ஒரு பெரும் புயல் உருவாகிக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. எப்பேர்ப்பட்ட அண்ணனாக இருந்தாலும், ஒரு வீணான சந்தேகத்தைச் சுமந்துகொண்டு அவர் எப்படி அந்தச் சபையில் இனியும் தொடர்வார் என்று தெரியவில்லை. இலங்கையின் அஸ்திவாரம் இப்போது நெருப்பால் அல்ல தாயே, இந்தச் சந்தேகத்தால்தான் ஆட்டம் கண்டிருக்கிறது.”

சீதை எழுந்து நின்றாள். வானில் இருந்த புகைமூட்டம் இப்போது மெல்ல விலகத் தொடங்கியிருந்தது. ஆனால், இலங்கையின் அரசியலில் ஒரு மாபெரும் புகைமூட்டம் இப்போதுதான் கிளம்பியிருக்கிறது என்பதை அவள் உணர்ந்தாள்.

அவள் உதடுகளில் புன்னகை விரிந்தது. அவள் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.

“உன்னிடம் ஒட்டிக்கொண்டிருந்த அறமும் உன்னை விட்டு விலகுகிறது இராவணா! இனி உன் அழிவு நிச்சயம்.”

(தொடரும்)

அசுரவதம்

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 17: பகை மூட்டிய புகை

Author

You may also like

Leave a Comment