Home நாவல்அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 9: படபடத்த பட்டாம்பூச்சி 

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 9: படபடத்த பட்டாம்பூச்சி 

by Iyappan Krishnan
0 comments
This entry is part 50 of 50 in the series அசுரவதம்

அனுமனை நிலைகுலையச் செய்யும் இராவணனின் ஒன்பதாவது மாய வலை, வதந்தியாக இலங்கையின் வீதிகளெங்கும் காட்டுத்தீயெனப் பரவியிருந்தது.

வதந்தி என்பது மானுடக் கூட்டுமனதின் ஆழத்தில் உறங்கிக் கிடக்கும் அச்சம், பொறாமை மற்றும் பாதுகாப்பின்மையின் கூட்டு வெளிப்பாடு. மனிதன் தன் அன்றாடப் போலி முகங்களுக்குப் பின்னால் மறைத்து வைத்திருக்கும் இருண்ட பக்கங்களின் வடிகால் அது.

மனிதனுக்குக் கதை சொல்லும் உந்துதல் ஒன்று எப்போதுமே உண்டு. உண்மை சலிப்பூட்டும்போது, மனித மனம் தன் கற்பனையால் அதற்கு விகாரமான சிறகுகளை முளைக்க வைக்கிறது. வதந்தி எங்கு தொடங்குகிறதோ, அங்கு உண்மை தன் முகத்தை இழந்துவிடுகிறது. அது அறத்தின் வீழ்ச்சி. அந்த வீழ்ச்சிக்கான சூழ்ச்சி வலையை இராவணன் வெகு தந்திரமாக விரித்திருந்தான்.

“மிதிலையின் இளவரசி தன் பிடிவாதத்தை விட்டுவிட்டாள்! அசுரர் குலத்தின் சக்கரவர்த்தியை ஏற்றுக்கொண்டு அவள் அந்தப்புர மணிமாடத்திற்குள் நுழைந்துவிட்டாள்!” என்ற வதந்தியை ஒற்றர்கள் திட்டமிட்டு நகரின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பினர்.

வதந்தி தந்த வெதுவெதுப்பான சூட்டில் மதுக்கோப்பைகளை ஏந்தியபடி அரக்கர்கள் அந்த வெற்றியை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். அந்த வதந்தி ஒருநாள் சுட்டெரிக்கும் நெருப்பாகத் தங்களையே மாற்றும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

மாளிகைக் கூரைகளின் நிழல்களில் மறைந்திருந்த அனுமனின் நெஞ்சில் அந்தச் சொற்கள் நஞ்சூட்டப்பட்ட ஈட்டிகளைப் போல இறங்கின.

‘இது உண்மையில்லை; இது நடந்திருக்க வாய்ப்பில்லை’ என்று அவனது உள்மனம் அரற்றியது.

‘இது நடக்கக்கூடியதா? சூரியனை விட்டு ஒளி பிரிந்துவிடுமா? கற்பின் வடிவமான அன்னை சீதை, இந்த அரக்கனின் போக மாளிகையை ஏற்றுக்கொண்டாளா?’ அனுமனின் மனம் ஒரு கணம் நரக வேதனையில் பிளந்தது.

மனம் எப்போதுமே விசித்திரமானது. ஒருபக்கம் ஆழமான நம்பிக்கையை விதைக்கும் அதே வேளையில், மறுபக்கத்தில் சந்தேகத்தின் விதையைத் துளிர்விடச் செய்யும். அனுமனையும் அந்த விசித்திர வழக்கம் விட்டுவைக்கவில்லை.

அவனது அசைக்க முடியாத நம்பிக்கை, இதுவும் இராவணனின் வஞ்சகமாகவே இருக்கும் என்று எச்சரித்தாலும், உண்மையை நேரில் கண்டறியாமல் தன் மனம் ஓயாது என்ற உறுதியோடு இராவணனின் அந்தப்புரத்தை நோக்கி அவன் பாய்ந்தான்.

நகர மக்களின் பேச்சிலிருந்து தான் கிரகித்த விவரங்களை வைத்து, இராவணனின் தனி அந்தப்புரம் என்று சொல்லப்பட்ட மண்டபத்திற்குள் அனுமன் ஊடுருவியபோது, அங்கே ஒரு பெண் அதிக சொகுசுகள் அற்ற விரிப்புகள் கொண்ட தரையில் படுத்திருந்தாள். அவளது முகம் சீதையின் வனப்பை அச்சுப்பிசகாமல் பிரதிபலித்தது. இராமன் சொன்ன அந்த அங்க அடையாளங்களை அவன் ஒப்பு நோக்கினான், சற்றேறக்குறைய அவை பொருந்தியிருந்தன.

ஆனால், அவளது முகத்தில் சிறைப்பட்ட பெண்ணின் துயரமோ, கண்ணீரோ, கணவனைப் பிரிந்த விம்மலோ துளியும் இல்லை. மொத்தத்தில் அந்த இடம் இன்பத்தைத் துய்க்கும் இடமாகவோ, அல்லது துன்பத்தை ஊட்டும் சிறைக்கூடமாகவோ இருக்கவில்லை. அந்த மண்டபத்தில் இருந்தவள் உலகத்தின் இன்ப துன்பங்களைக் கடந்த ஒரு ஞானியைப் போல, எவ்வித சலனமுமின்றி நிர்மலமான அமைதியோடு படுத்திருந்தாள்.

அவள் கண்கள் மூடியிருந்ததால், அவளது சீரான மூச்சினால் எழும்பி இறங்கிய உடலசைவை வைத்து அவள் உயிருடன் இருக்கிறாள் என்பதை அனுமன் உணர்ந்தான்.

அவன் சற்றே திகைப்பிற்கு ஆளானான். மண்டபத்திற்கு வெளியே தாதிப் பெண்கள் கூடி, அவளை அலங்காரம் செய்து அழைத்துச் செல்ல எல்லாப் பொருட்களையும் வைத்திருந்தனர்; ஆனால் உள்ளே நுழையத் தயங்கி நின்றனர்.

அவன் கண்ட அந்த மங்கையும் மரவுரி அணிந்திருந்தாள். ஆனால், இவள் சீதை என்று உறுதிப்படுத்த ஏதோ ஒன்று குறைந்தது. இராமனை நெருங்கும்போது உண்டாகும் இயல்பான பரவசமும் அன்பின் மிகுதியும் இங்கே அவனுக்கு உண்டாகவில்லை. மேலும், அவள் அந்த மண்டபத்தில் பல நாட்களாக இருந்ததன் சாட்சியாக அவளுக்குரிய உடைகளும் உணவுப் பாத்திரங்களும் அங்கிருப்பதைக் கண்ட அனுமனின் உள்ளுணர்வு விழித்துக்கொண்டது.

‘இதுவும் அரக்க மாயை தான் போல. இவள் அன்னை சீதை அல்ல!’ என்று அவன் தெளிவடைந்தான்.

ஒருபக்கம் அவன் மனம் இது சீதை இல்லை என்று உணர்த்தினாலும், இன்னொரு மனம் இது தோல்வியின் ஒன்பதாவது படி என்று திரும்பத் திரும்பச் சொல்லி அவனைச் சோர்வில் தள்ளியது. அனுமன் அமைதியாக வெளியேறினான்.

அந்தப்புரத்தின் இருண்ட சாளரத்தின் பின்னால் மறைந்து நின்று அனுமனின் அசைவுகளைக் கவனித்துக் கொண்டிருந்த இராவணனின் இதழோரத்தில் ஒரு குரூரமான விஷமச் சிரிப்பு படர்ந்தது.

அவனது சிந்தனை பின்னோக்கிப் பாய்ந்தது.

முன்பு மண்டோதரி தன்னிடம் “சீதை நம் மகள்” என்று சொன்னபோது, உண்மையில் அவனது சகலமும் அடங்கியது போலத்தான் இருந்தது. அது வீடணனின் சதி என்று சரமையைக் கண்டு அவன் முடிவு செய்திருந்தாலும், மண்டோதரியின் கண்களில் இருந்த உண்மை அவனைக் கலங்கடித்திருந்தது. மண்டோதரி நீங்கிய பின்னும் கைகால்கள் நடுங்க அந்த மண்டபத்தில் நின்ற இராவணன், தன் நினைவுகளைப் பின்னோக்கி ஓடவிட்டான்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பல தேசத்துப் பெண்களைத் தான் சிறைபிடித்து வந்தபோது, அதில் ஒரு பெண் மண்டோதரியின் அத்தனை ஜாடைகளோடும் இருந்தது அவனது நினைவுக்கு வந்தது. அவள் தன் இச்சைக்கு இணங்க மறுத்துத் தீயில் பாய்ந்தபோது, அவளைக் காப்பாற்றி இந்தச் சிறைக்கூடத்தில் அவன் வைத்திருந்தான். அப்போது அவனது மனம் இளகிக் கனிந்து காமம் மறைந்திருந்தது. அது அவளின் உயிர் தியாகச் செயலைக் கண்டு உண்டான பரிதாபம் என்று அப்போது தன்னைத் தேற்றிக்கொண்டிருந்தான்.

இலங்கைக்கு வந்த பிறகும் அந்தப் பெண்ணை இச்சையுடன் நெருங்கும் போதெல்லாம் தன் மனம் ஏதோ ஒரு தடையிட்டுத் தன்னைத் தூரத் தள்ளியதன் காரணத்தை இராவணன் இப்போது உணர்ந்துகொண்டான்.

‘ஆம், இவள்தான் மண்டோதரி சொன்ன குழந்தையாக இருக்க வேண்டும்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

அவன் உடனே அந்தப் பெண்ணைச் சிறைவைத்திருந்த மண்டபத்திற்குச் சென்று, உறங்கிக் கொண்டிருந்த அவளை உற்று நோக்கினான். இதுவரை காமத்துடன் மட்டுமே அவளைக் காண வந்த கண்கள், இப்போது சற்றே கனிந்து, துளிர்விடும் வாஞ்சையோடு அவளைக் கவனிக்கத் தொடங்கின.

அவளின் கேசம் மறைக்காமல் விட்டிருந்த கழுத்துப் பகுதியில் இருந்த அந்தச் செந்நிற நட்சத்திரக் குறி போன்ற மச்சத்தை இப்போதுதான் முதல் முறையாகக் கவனித்தான். அந்த மச்சத்தை மண்டோதரியின் கழுத்தில் ஏற்கனவே அவன் பார்த்திருக்கிறான். அது மயன் குலத்திற்கே உரிய மச்சம்.

அவன் நினைவிலிருந்து மீட்டெடுத்த அவளது அங்க அசைவுகளும், முக அமைப்பும், இந்த மச்சமும் அவள் மண்டோதரியின் கருவறையில் உதித்த உண்மையான மகள்தான் என்று திரும்பத் திரும்பச் சொல்லி அவனுடைய பதற்றத்தைக் குறைத்தது.

‘மண்டோதரி எவளைக் கடலில் எறிந்தாளோ, அந்த உண்மையான என் மகள் பல காலத்திற்கு முன்பே என் சிறைக்குள் வந்துவிட்டாள்! அசோகவனத்தில் இருப்பது என் மகள் அல்ல!’ என்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

“வேதவதி… என் மனைவியின் மகளே!” என்றான் மனதிற்குள் மகிழ்வாக.

இராவணன் அந்த வேதவதியைத்தான் அனுமனை ஏமாற்ற ஒன்பதாவது வலையாக அங்கே நிறுத்தியிருந்தான்.

அவனது மனம் உளைச்சலில் இருந்து முழுதும் மீண்டது. தலையை லேசாக உலுக்கித் தன் நினைவுகளிலிருந்து வெளிப்பட்டு, அனுமன் அந்த இடத்திலிருந்து தளர்வாக வெளியேறுவதைக் கண்டு சிரித்தபடியே அவன் தன் அந்தப்புரம் சென்றான்.

அதே நேரம், அரண்மனையை விட்டு வெளியேறும் அவசரத்தில் அனுமன் அடுத்த மாடத்தின் வழியே பாய்ந்தான். அந்த மண்டபம் மிகப் பெரியதாகவும் மிகுந்த அலங்காரத்துடனும் விளங்கியது. பலத்த காவலர்கள் வெளிப்புறத்தில் நின்றிருந்தனர்.

அனுமனுக்குள் சந்தேகம் மீண்டெழுந்தது. ‘ஒருவேளை தான் தவறான இடத்தைத் தேடிவிட்டேனோ?’ என்று அவன் அயர்ந்தான். இந்த மண்டபத்தையும் ஆராய்ந்துவிடலாம் என்று தன்னை மிகவும் சிறிய உருவத்தில் மாற்றிக்கொண்டு யாரும் அறியாமல் உள்ளே நுழைந்தான்.

மண்டபத்தின் உள்ளே அவன் கண்ட காட்சி அவனைத் திடுக்கிடச் செய்தது. அங்கே சந்திரகாந்தக் கட்டிலில் மற்றொரு பேரழகி படுத்திருப்பதைக் கண்டான். அவளது முகத்தில் இருந்த பொலிவும், பேரரசிக்குரிய அமைப்பும் மீண்டும் அனுமனின் கால்களை ஒரு கணம் தயங்க வைத்தன. இராமன் தன்னிடம் விவரித்த அத்தனை லட்சணங்களும் இவளிடம் பொருந்துகிறதே என்று அனுமன் மீண்டும் கலங்கினான்.

‘இறைவா, எந்தையே இராமா, இது என்ன சோதனை!’ என்று மனம் அரற்றியது. அவனது கண்களில் நீர் கோர்த்துக்கொண்டு அந்த இடத்தை மறைத்தது. அவன் கண்ணை அந்த நேரத்தில் மறைத்தது அவனது நுண்ணுணர்வை மீறி அவனை ஆட்கொண்டிருந்த சந்தேக மனம்தான் என்பதில் ஐயமில்லை. அனுமனை அந்தச் சந்தேகம் மெல்ல மெல்ல ஆட்கொள்ளத் தொடங்கியது. அனுமனின் உடல் நடுங்கியது. ‘இந்த இலங்கையை, இந்தப் பெருமாளிகையை அழித்துவிடப் போகிறேன்’ என்று உறுதியோடு அவன் திரும்ப நினைத்த அந்தக் கணத்தில், அந்தப் பெண் தன் உறக்கத்தின் ஆழ்ந்த கனவில் புரண்டு படுத்து விம்மியழுது புலம்பத் தொடங்கினாள்:

“மகளே… என் செல்வமே… உன்னைக் காம இச்சையோடு பார்க்கும் உன் தந்தையிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவேன்? ஜோதிடர்கள் சொல்லைக் கேட்டு உன்னைக் கடலில் வீசினேன்; அன்று நீ தப்பித்தாய்; இன்று என் கணவனே உன்னை அழிக்கத் துடிக்கிறானே…” என்று அமங்கலமான ஒலியெழுப்பி நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதாள்.

அனுமன் நிதானித்தான். அவளின் அந்த அழுகைக் குரல் அவன் சந்தேக மேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கியது. அவனது கண்கள் கூர்மையாகின.

சேடியர்கள் விழித்தெழுந்து அவளைத் தேற்றும் அந்த நிலையில் அவளைக் கவனித்தான். இவள் உருவம் சீதையைப் போல இருந்தாலும் இவளின் உடலில் தளர்வும் மூப்பும் தெரிகின்றன. இவள் தன் மகள் என யாரையோ நினைத்து அழுகிறாள். இவளின் அமங்கலச் சொற்களும், அவளைச் சுற்றி இருக்கும் அமங்கல சகுனங்களும் இவளின் கணவனுக்கும், அவளது நாட்டுக்கும் அழிவைக் கொண்டுவரும் என்பதை உணர்த்துகின்றன.

அத்தனையையும் உன்னிப்பாகக் கவனித்த அனுமன் உண்மையை முழுமையாக உணர்ந்துகொண்டான்.

‘இவள் அன்னை சீதை என எண்ணியது என் மூடத்தனம். இந்தப் பாவத்தை எந்த வகையில் நான் கழிப்பேன்?’ என்று உள்ளம் கலங்கினான்.

‘இவள் இராவணனின் பட்டத்தரசி மண்டோதரி! தன் மகளை நினைத்துக் கதறும் ஒரு தாய்!’ என்று தெளிவடைந்தான். அன்னை சீதை இந்த ஆடம்பர மாளிகைகளில் எங்குமே இல்லை; அவள் இந்த நகரத்தின் மாயைகளுக்கு அப்பால் தனித்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அந்த அழுகை அவனுக்குப் பளிச்சென உணர்த்தியது.

அந்தப்புரத்திலிருந்து மின்னலென வெளியேறி, நகரின் எல்லைக்கு வந்து ஒரு பாறையின் மீது அமர்ந்தான் அனுமன். அவன் இதுவரை நடந்த நிகழ்வுகளை வரிசைப்படுத்தி அலசினான். அவை தனக்கு விரிக்கப்பட்ட தந்திர வலை என்பதை உணர்ந்து நாணினான். ‘எப்படி இந்த வலைக்குள் மாட்டி அல்லல்பட்டேன்? இப்படி அறிவற்றுத் திரிந்த நான் இராமனின் தூதுவனாக வந்தது இராமனுக்கு நான் செய்யும் துரோகம் அல்லவா?’ என்று குமைந்தான்.

இனி மற்றவர்களின் பேச்சுகளை அளவுகோலாக வைத்துச் சீதையைக் கண்டறிய முடியாது என்பதை உணர்ந்து கண்களை மூடினான். தன் சுவாசத்தை இராம நாமத்தோடு இணைத்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினான். உலகத்தின் புற மாயைகள் அனைத்தும் அவனது அகத்திலிருந்து விலகின.

அப்போது, நள்ளிரவின் குளிர்ந்த காற்றில் ஒரு விசித்திரமான, தூய காட்டுப்பூக்களின் நறுமணம் கலந்தது.

அனுமன் கண்களைத் திறந்தான். அவனுக்கு முன்னால், இருளைக் கிழித்துக்கொண்டு பொன்னிற ஒளியை உமிழ்ந்தபடி ஒரு சிறு பட்டாம்பூச்சி சிறகடித்து வட்டமிட்டது. நள்ளிரவின் அமைதியில், அந்த மாய நகரத்தின் எல்லையில் அது ஒரு தர்மத்தின் வழிகாட்டியாக நின்றது.

அந்தப் பட்டாம்பூச்சி அனுமனை நோக்கி ஒருமுறை தாழ்ந்து பறந்து, பின்னர் தென்திசையின் அடர்ந்த வனப்பகுதியை நோக்கி வழிகாட்டிப் பறக்கத் தொடங்கியது. அனுமன் எவ்விதத் தயக்கமுமின்றி அந்த இயற்கையின் தூதனைப் பின்தொடர்ந்தான்.

மாளிகைகளின் எல்லை முடிந்து, அடர்ந்த மரங்களும், நிலவொளியைத் தடுத்து நிறுத்தும் பச்சை இலைகளும் கொண்ட அசோகவனத்தின் வாயிலில் அந்தப் பட்டாம்பூச்சி சென்று மறைந்தது.

அங்கே தூரத்தில் அவன் கண்ட காட்சி…

அனுமன் அச்சத்தின் உச்சியில் நடுங்கினான். அவன் உள்ளம் படபடத்தது.

(தொடரும்)

அசுரவதம்

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.

Author

You may also like

Leave a Comment