- அசுரவதம் -1 முதல் சந்திப்பு
- அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
- அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்
- அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்
- அசுரவதம் : 5 – புதுவரவு
- அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி
- அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை
- அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.
- அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.
- அசுரவதம்: 10 – பழியின் பயணம்.
- அசுரவதம்: 11 – நெடிது நின்ற நாயகன்.
- அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு
- அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்
- அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!
- அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்
- அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்குவா
- அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்
- அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
- அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.
- அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்
- அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.
- அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)
- அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 – இரு மகளிர் .. இரு சிந்தனை.
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17: நீறு பூத்த நெருப்பு
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்
- அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6: உடையும் அரண்கள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 9: படபடத்த பட்டாம்பூச்சி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 8: மாயைக் குகைகள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: ஒளியின் தவிப்பு!
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 11: தாய்க்கு ஒரு தாலாட்டு
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 13: நிலமே அம்மியாக, உடல் குழவியாக
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 14: காற்றின் போர்
வெம்மையின் பெருமூச்சுகளோடு தகித்துக் கிடந்தது அந்தப் பெருங்காடு. நூற்றாண்டுகளாக வானை முட்டி நின்ற பேராலங்களும், அரசுகளும் தன் நிலை முற்றும் இழந்திருந்தன. விண்ணில் இருந்து இறங்கிய பெரும் கரமொன்று வான்நோக்கி நின்ற மரங்களை அப்படியே தலைகீழாகப் பிடுங்கி எறிந்ததைப் போல, நிலப்பரப்பு முழுக்க வேர்கள் வானை நோக்கிக் கதறிக்கொண்டிருந்தன.
விலங்குகளில் பல அழிந்தும், பல அங்கே உயிருடனும் இருந்தன. ஆனால், அவற்றின் ஆன்மாக்கள் உறைந்து போயிருந்தன. காரணமே புரியாமல், எந்த இயற்கையின் முன்னறிவிப்பும் இல்லாமல், தங்களைத் தற்காத்துக் கொள்ளச் சிறிது நேரமும் இல்லாமல் இடிபாடுகளில் சிக்கி, கொம்புகள் உடைந்த மான்களும், கால்கள் நசுங்கிய காட்டுப்பன்றிகளும், காட்டெருமைகளும், மிளாக்களுமென பல விலங்குகளின் கூட்டம் அசைய முடியாமல் கிடந்து முனகின.
அங்கே ஓரிடத்தில் திக்பிரமை பிடித்தது போலக் கொம்பன் யானை ஒன்று நின்றிருக்க, அதன் காலடியில் பெரு மரத்தால் அழுத்தப்பட்டு நசுங்கிக் கிடக்கும் அந்தச் சிறு யானையைக் கண்டு பிளிறலோடு சில யானைகள் சுற்றிச் சுற்றி வந்தன. பல, அனுமனின் காலடித் தடத்தில் மிதியுண்டு சேற்றுடன் சேறாக நசுங்கிக் கிடந்தன.
மேகநாதன், அந்த அழிவுகளைப் பார்த்து ஒரு கணம் திகைத்து நின்றான். அவன் கண்முன்னே அவன் கண்ட காட்சிகளை நம்ப முடியாமல், கனவில் இருந்து விடுபட முயல்பவன் போலத் தன் இரு கைகளால் முகத்தை அழுந்த மூடினான்.
வீழ்ந்த மரங்களில் இருந்து வெளிப்பட்ட அந்த வாசம், போரில் வீழ்ந்தவர்களின் குருதியுடன் இலைகளும் கிளைகளும் நசுங்கியதெல்லாம் கலந்து ஒரு விதமான குரூரப் பச்சை வாசனையை அவன் நாசிக்குள் திணிக்க, சட்டென்று தன் மூடிய கண்களை விரைவாகத் திறந்தான். அந்தச் சூழல் அவனுக்கு மூச்சு முட்டுவது போலத் தோன்றியது.
அந்த இடத்தை வானில் தன் மாயத்தேரில் இருந்து பார்வையிட்டுக் கொண்டே வந்த அவனது கண்கள், ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றன. அங்கே செந்நிறச் சேற்றின் மீது, அக்ஷய குமாரனுக்கு அளித்த கவசம் உடைந்து வீழ்ந்திருந்தது. அரச வம்சத்தின் மோதிரம் அணிந்த கை ஒன்று மட்டும் தனித்து வீழ்ந்திருந்தது.
அவன் தாடை இறுகியது. அவன் தான் வந்த தேர்க்காலை அழுந்திப் பிடித்த வேகத்தில் அது முறிந்து வீழ்ந்தது. அவன் கண்கள் பிரேதத்தின் கண்கள் போல உணர்ச்சியற்றுக் கிடந்தன.
மரணத்திற்கு எந்த முகமும் இல்லை. அது வந்து சேரும்போது, ஒரு வீரன் அதுவரை கட்டியெழுப்பிய அத்தனைப் பெருமைகளும், அவன் சுமந்த அகங்காரமும் கரைந்து குருதியாய் மண்ணில் ஊறிவிடும். தவம், வரம், ஆயுதங்கள் இவை அத்தனையையும் விட விதியின் கரங்கள் வலிமையானவை என்பதை அவன் மனம் உணர்ந்தது.
அவன் கண்கள் அந்த வனத்தைத் துருவித் துருவி ஆராய்ந்தன. சூர்ப்பநகையின் கணவன் வித்யுத்ஜிஹ்வனின் மரணத்துக்குப் பழி தீர்க்கக் காலகேய தானவர்கள் செய்த வேலையாக இருக்கக் கூடும் என்று தேடினான். ஒருவேளை தேவர்களின் சதியோ என்று கூர்ந்து நோக்கினான். அவன் கண் முன்னே யாருமில்லை, ஒரு குரங்கைத் தவிர.
தன் கண்களை நம்ப முடியாமல் மீண்டும் கவனித்தான். அங்கே அமர்ந்திருப்பது வெறும் வானரமா? இல்லை மாயையா? மீண்டும் உற்று நோக்கினான். அந்த முகத்தில் இருக்கும் அலட்சியமும், அமைதியும் ஒரு சாதாரணக் குரங்குக்குரியது அல்ல என்பதை உணர்ந்தான்.
அங்கே, ஒரு உடைந்த ஆலமரத்தின் மீது, எந்தச் சலனமும் இல்லாமல் ஒரு காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலட்சியமாக அமர்ந்திருந்தான் அனுமன். மேகநாதன் எந்த எச்சரிக்கையும் இன்றித் தன் போரைத் தொடங்கினான்.
அவனது வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள், ஒளியின் வேகத்தில் அனுமனை நோக்கிச் சீறின. ஆனால் அந்த அம்புகள் இலக்கை அடையும்போது, அவை தரையிலும் மரங்களிலும் ஊன்றி நின்றன. அங்கே அனுமன் இல்லை. அனுமன் வெகு இலகுவாக வேறு இடம் தாவி அமர்ந்திருந்தான்.
ஆயிரக்கணக்கான அம்புகள் வானை மறைத்துக்கொண்டு பாய்ந்தன. அனுமன் ஒரு இடத்தில் நிற்கவில்லை. காற்றில் பறக்கும் இலையைப் போல, அசைவின் தாளமாக அவன் மாறினான்.
மேகநாதன் ஏவிய கொடிய அம்புகளை அனுமன் தன் கைகளாலேயே லாவகமாகப் பிடித்தான். அந்த அம்புகளையே திருப்பி மேகநாதனின் படையை நோக்கி வீசினான். தான் நம்பிய ஆயுதங்களே தனக்கு எதிராகத் திரும்புவதைக் கண்ட மேகநாதனின் ஆணவம் சீண்டப்பட்டது.
அந்த வானரம் தன் செயல்களைக் கணித்துச் செயல்படுவதை உணர்ந்த மேகநாதன், மேகங்களுக்கு இடையே மறைந்து நின்று பல விதமான கணைகளை எய்தான்.
அகங்காரம் எப்போதுமே நேருக்கு நேர் மோதித் தோற்கும்போது, அது மாயையின் பின்னால் ஒளிந்துகொள்ளும். மனித மனம் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும்போது, தந்திரங்களை ஆயுதமாக எடுக்கிறது.
இப்போது அனுமன் யோசித்தான். ‘இந்தப் போர் இப்படியே தொடர்ந்தால் வெற்றித் தோல்வி என்பது தெரியாமல் நாள் பல கடக்கும். ஆகவே இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்று எண்ணித் தன் உடலைப் பெரிதாக்கினான்.
மேகநாதனின் அம்புகள் அனுமனின் பெரு உடலின் உரோமங்களில் பட்டு உதிர்ந்து மறைந்தன.
அனுமன் தன் உரு பெரிதானதும், மேகநாதனை மறைத்திருந்த மேகங்களைத் தன் வாயால் ‘உஃப்’ என்று ஓங்கி ஊதினான். அந்தப் பிரளயக் காற்றில் மேகம் கலைந்து, அவன் முன்னே மேகநாதன் வெளிப்பட்டான். மேகநாதன் சளைக்காமல் பல தெய்வ அஸ்திரங்களைக் கொண்டு அனுமனை எதிர்த்தான்.
அவன் ஆற்றலைக் கண்ட அனுமன்,
“இலக்குவன் இவனுடன் பெரும் போர் புரிய நேரிடும். இவன் இணையற்ற வீரன், ஆனால் இலக்குவனால் இவன் சாய்க்கப்படுவான்,” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
எந்தக் கணைகளும் அனுமனை அழிக்காததைக் கண்டு, மேகநாதன் முதன்முறையாகத் தன் சினத்தை முகத்தில் காட்டினான்.
“நீ இந்திரனின் மாயமோ, காலகேய தானவர்களின் மாயமோ… அல்லது மும்மூர்த்திகளின் மாயமோ… நானறியேன். அது எனக்குத் தேவையற்றதும் கூட. உன்னை அழிக்காமல் உயிரோடு கொண்டுவரும்படி அரசரின் ஆணை; ஆகவே நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய் வானரமே!” என்றான் மேகநாதன் இடிமுழக்கம் போல.
அனுமன் நகைத்தான். அந்த நகைப்பு மேகநாதனை இன்னும் தூண்டிவிட்டது.
“மரத்துக்கு மரம் தாவித் தப்பிவிட்டதால் நீ பெரு வீரனாகிவிட மாட்டாய் குரங்கே! இதோ முடிந்தால் இப்போது தப்பியோடு பார்ப்போம்!” என்று பிரம்மாஸ்திரத்தை ஆவாகனப்படுத்தி அனுமன் மீது எய்தான்.
பிரம்மாஸ்திரம் சீறி வருவதைக் கண்ட அனுமன், மனதிற்குள் புன்னகைத்தான். பிரம்மதேவன் தனக்கு அளித்த வரம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. “என் படைக்கலன் உன்னை எந்த வகையிலும் துன்புறுத்தாது மகனே. ஒரு முகூர்த்தம் வேண்டுமானால் உன்னை அது கட்டி வைக்கும். மேலும், பிரம்மாஸ்திரத்தின் மீது நம்பிக்கையிழந்து வேறு ஆயுதமோ அல்லது கயிறோ உன் மீது பட்டால், அந்த நொடியே பிரம்மாஸ்திரம் செயலிழக்கும்!” என்று பிரம்மன் அளித்த வரம் நினைவுக்கு வந்தது.
அவன் உள்ளம் வேகமாக கணக்கிட்டது. இராவணன் வரும் வரை தாமதித்தால் இராமனின் தூது முடிவுக்கு வரப் பல நாட்கள் ஆகும். மேலும் பிரம்மாஸ்திரம் என்பது தெய்வப் படைக்கலம். தன்னால் அதை உடைக்க முடியும் என்றாலும், அது படைக்கலனை அளித்த பிரம்மனுக்கு மரியாதைக் குறைவை உண்டாக்கும்.
உண்மையான பலம் என்பது தன் வலிமையைக் காட்டுவதில் இல்லை; அறத்தின் முன்னும், உலக நியதிக்கு முன்னும் ஒருவன் தன் அகங்காரத்தைச் சுருக்கிக் கொண்டு எப்படிப் பணிகிறான் என்பதில்தான் இருக்கிறது. பணிவு தோல்வியாகாது, அதுவே வெற்றியின் ஆணிவேர்.
‘இராவணனை அணுக, நான் கைதியாகச் செல்வதே உசிதம்’ என்று முடிவெடுத்தான்.
தன் இரு கைகளையும் கூப்பி, “எந்தையே பிரம்மதேவா, வணங்குகிறேன்,” என்று பிரம்மாஸ்திரம் தன்னைப் பிணைக்க அனுமதி அளித்தான். தரையில் கட்டுண்டு வீழ்ந்தான்.
ஆபத்து நீங்கியதை எண்ணி, அரக்கர்கள் ஓடிவந்து அனுமனைச் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் பிரம்மாஸ்திரக் கட்டு போதாது என்று, இரும்புச் சங்கிலிகளாலும், காட்டுக் கொடிகளாலும், சணல் கயிறுகளாலும் அவனது உடலைச் சுற்றிக் கட்டினர்.
அவர்கள் கட்டிய அந்த மறுகணமே, அவனைப் பிணைத்திருந்த அந்தப் பிரம்மாஸ்திரம் தன் தெய்வத் தன்மையை இழந்து, செயலை நிறுத்தி வெறும் கயிறானது. வெற்றியின் களிப்பில் அகங்காரத்தின் உச்சத்தில் இருந்த மேகநாதன் இதைக் கவனிக்கத் தவறினான்.
“வீரர்களே, இந்தக் குரங்கை வீதி வீதியாக இழுத்துச் சென்று கடைசியாக அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்!” என உத்தரவிட்டுவிட்டு, அந்த இடத்தை விட்டு நீங்கினான்.
இலங்கையின் வீதிகளில் அனுமன் இழுத்துச் செல்லப்பட்டபோது, நகரமே வேடிக்கை பார்க்கத் திரண்டது. மக்கள் ஆரவாரம் செய்தனர்.
ஆனால் அனுமனின் கண்கள் ஒரு யோகியின் கண்களைப் போல அந்த நகரத்தை அளவிட்டன. இலங்கை ஒரு அழகிய சவக்குழி. காமத்தாலும், அகந்தையாலும், அடுத்தவர் பொருளை அபகரித்த பாவத்தாலும் கட்டப்பட்ட ஒரு மாபெரும் மாய நகரம். இதன் வீதிகளில் வழியும் செல்வமும், அரக்கர்களின் கொண்டாட்டமும் ஒரு கூட்டுப் பைத்தியக்காரத்தனம் என்பதை அனுமனின் ஞானக் கண்கள் உணர்ந்தன.
அந்த நகரத்தின் அத்தனை ரகசியங்களையும் தன் மனதிற்குள் ஒரு வரைபடமாகப் பதிவு செய்துகொண்டே வந்தான். தங்களை அறியாமலேயே, அரக்கர்கள் தங்களின் அழிவிற்கான வரைபடத்தை எதிரிக்கு விளக்கிக் கொண்டிருந்தனர்.
இறுதியாக, அந்த மாபெரும் ஊர்வலம் இராவணனின் கொலுமண்டபத்தை அடைந்தது. அந்த உயர்ந்த அரியணையில் இராவணன் வீற்றிருப்பதைக் கண்டதும், அவன் அன்னை சீதைக்குச் செய்த கொடூரங்கள் நினைவுக்கு வர, அனுமனின் கண்கள் சிவந்தன.
“உன் கதையை இன்றோடு முடித்துவிடுகிறேன் இராவணா!” என்றான் அனுமன். அவன் கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது.
(தொடரும்)