- அசுரவதம் -1 முதல் சந்திப்பு
- அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
- அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்
- அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்
- அசுரவதம் : 5 – புதுவரவு
- அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி
- அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை
- அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.
- அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.
- அசுரவதம்: 10 – பழியின் பயணம்.
- அசுரவதம்: 11 – நெடிது நின்ற நாயகன்.
- அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு
- அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்
- அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!
- அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்
- அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்குவா
- அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்
- அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
- அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.
- அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்
- அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.
- அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)
- அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 – இரு மகளிர் .. இரு சிந்தனை.
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17: நீறு பூத்த நெருப்பு
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்
- அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6: உடையும் அரண்கள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 9: படபடத்த பட்டாம்பூச்சி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 8: மாயைக் குகைகள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: ஒளியின் தவிப்பு!
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 11: தாய்க்கு ஒரு தாலாட்டு
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 13: நிலமே அம்மியாக, உடல் குழவியாக
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 14: காற்றின் போர்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 15: அட இராவணா
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 16: அணக்க நகரம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 17: பகை மூட்டிய புகை
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 18: கருணையின் ஊற்று
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 19: புனரபி ஜனனம், புனரபி மரணம்..
நகருக்கும் கடலுக்கும் இடையே இருந்த இயற்கை அரண்கள் அனுமனால் அழிக்கப்பட்டதால், கடலின் இரைச்சல் அசோக வனத்தின் எல்லைகளைத் தாண்டி, எரிந்து சாம்பலாகிக் கிடந்த இலங்கையின் வீதிகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
தங்கம் உருகி வழிந்தோடிய வீதிகளின் மீது சாம்பலும் கரியும் படிந்துகிடந்தன. காற்றின் அசைவுகளில் அவை விலகும்போது, வெய்யோனின் ஒளி தங்கத்தின் நிறத்தைப் பளீரிடச் செய்தது.
இராவணன் தன் அரச மண்டபத்துக்குள் நுழைந்தான். இடிபாடுகள் நீக்கப்பட்டு, இலங்கையின் சிறந்த தச்சர்களால் அது மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருந்தது. ஆனால், பழைய பொலிவு இல்லாமல் அந்த அவை இராவணனின் வெற்றியும் செருக்கும் கருகிப் போனதன் மிச்சமாக அவன் கண்களுக்குத் தெரிந்தது.
“இராவணனின் பெருமையும், அவன் அரசாங்கத்தின் பாதுகாப்பும்… கேவலம் ஒரு குரங்கு சிதைக்கக்கூடிய அளவில் தான் இருக்கிறதா? சொல்லுங்கள் படைத்தளபதிகளே!” என்று ஓங்கித் தரையைத் தன் கால்களால் மிதித்தான்.
அந்த அவையினர் அச்சத்தாலும் அடுத்து என்ன சொல்வது என்று வார்த்தைகளின்றி மௌனமாக இருந்தனர்.
“அரசே, இந்த அரச மண்டபத்தில் பெண்கள் பேச உரிமை உள்ளதா?” என்றாள் மண்டோதரி.
அரசவை மீண்டும் ஒருகணம் அமைதியானது. அவள் அந்த மண்டபத்தின் சீரமைப்பை மிகுந்த வேதனையோடு பார்த்துக் கொண்டே சொன்னாள்.
“பட்டத்து அரசியாக என் காலடி பட்ட இடங்கள் வெந்து சாம்பலாகி இருக்கின்றன. யாரும் கனவிலே தொட நினைத்தாலும் அவர்களை அழித்துவிடும் இலங்கேஸ்வரனின் அரியணை இது…” என்று தன் கைகளை நீட்டினாள்.
சீரமைக்கப்பட்ட அந்தத் தங்க அரியாசனத்தின் மீது அனுமனின் கால்தடங்கள் படிந்திருப்பதை மனதால் உணர்ந்தான் இராவணன். அவன் உள்ளம் கொந்தளித்தது. அவனது கண்களில் சினம் குருதியாக முட்டியது. தேவர்களையே சிறைப்பிடித்த அவனது அரச மண்டபம் இன்று அவமானத்தின் எச்சமாக நிற்கிறது.
“அந்த அரியணையைப் பிய்த்து எறியுங்கள்!” இராவணனின் குரல் கரகரப்பாக, அடிபட்ட சிம்மத்தின் ஒலியாக ஒலித்தது.
மண்டோதரி அமைதியாக நின்றிருந்தாள். பின் இராவணனை நோக்கித் திரும்பினாள்.
“அரசே, இந்தச் சீரழிவின் காரணம் வெறும் குரங்கு அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்,” என்றாள் நிதானமாக.
“ஒரு அரசனின் அகந்தையும், செருக்கும், காமமும் அவன் நகரத்தையே அழிக்கும். இன்று இங்கே அழிவின் காரணம் என்ன என்பதை நீங்களும் மந்திரிக்கூட்டமுமாக விவாதித்துச் சரிசெய்யுங்கள். ஆனால், இந்த நகரத்தை, இந்த அரண்மனையைச் சரி செய்யும் வேலையை என்னிடம் விட்டுவிடுங்கள்.”
“மண்டோதரீ…” இராவணனின் சினம் எல்லை மீறியதில் உடல் நடுங்கியது.
“நீ பேசிக்கொண்டிருப்பது இலங்கேஸ்வரனுடன்!” என்றான்.
“ஆம், அதை நான் நன்கறிவேன். அதே நேரம், உலகிற்கே சிற்ப இலக்கணத்தை வகுத்துத் தந்த சிற்பி மயனின் மகள் நான்.”
ஏதோ பேச வந்த இராவணனை நோக்கி மீண்டும் கம்பீரம் நிறைந்த பணிவுடன் பேச ஆரம்பித்தாள்.
“அரசே, இப்போதைய முக்கியத் தேவை மக்களின் இன்னலைப் போக்குவது. நான் பட்டத்தரசி, என் நகர மக்களின் தாய். என் மக்களின் கண்ணீர் என்னை வாட்டுகிறது.”
“நீ ஒரு பெண்… உனக்கென்ன தெரியும் இந்த அரசின் நிலவரமும், அதைச் சரி செய்யும் முறையும்? என்னை அவமானப்படுத்த நினைக்கிறாயா?”
“இல்லை அரசே, தங்களுடன் தோள்கொடுத்து நிற்க நினைக்கிறேன். இந்த நகரத்தை இரண்டு நாட்களாகச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன். மக்களின் கூக்குரலையும் தாண்டி நான் காணும் பாதுகாப்புக் குறைபாடுகளையும் கண்டிருக்கிறேன்,” என்றாள் உறுதியான குரலில்.
இராவணனின் குரலில் வெம்மை லேசாகத் தணிந்தது.
“என்ன குறைபாடுகளைக் கண்டாய்?”
இராவணனின் குரல் மாற்றத்தைக் கண்டு லேசான புன்னகையுடன், அவள் தன் இடுப்பில் செருகியிருந்த ஓலைச்சுருளை மெல்ல விரித்து அவனுக்கு முன்னால் வைத்தாள். பின் சொல்லத் தொடங்கினாள்:
“நமது ஒட்டுமொத்தப் பாதுகாப்பும் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளை நோக்கியே குவிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களும், வானரங்களும் வடக்கிலிருந்துதான் வருவார்கள் என்ற உங்களது கணிப்பு, கிழக்கிலும் தெற்கிலும் உள்ள கடலோரப் பகுதிகளை முற்றிலும் பலவீனமாக்கிவிட்டது. அந்த வானரம் நுழைந்தது அந்தத் திசையிலிருந்துதான்.”
“ம்ம்… தொடர்ந்து விவரித்துச் சொல்,” என்றான் இராவணன் தன் குரலில் எந்தச் சலனமும் காட்டாது.
“இலங்கையின் ஒட்டுமொத்தப் படைக்கான அஸ்திரங்களும், ஆயுதங்களும் நகரின் மையப்பகுதியில் இருக்கும் பெரிய கிடங்கில்தான் வைக்கப்பட்டிருந்தன. அது அனுமனால் பொசுக்கப்பட்டது. அதன் விளைவை நான் விளக்கிச் சொல்ல வேண்டுமா?” என்றாள் நிதானத்துடன்.
“வேண்டாம், மேலே சொல்,” என்றான் இராவணன்.
“நம்முடைய படைகளின் பாசறைகளும், அமைச்சர்களின் மாளிகைகளும், சாமானிய மக்களின் வீடுகளும் மிக நெருக்கமாக, ஒன்றோடொன்று பிணைந்து கிடக்கின்றன. அரண்மனைக்கு வைக்கப்பட்ட தீ, எளிய மக்களின் வீடுகளுக்கு எளிதாகப் பரவ இதுவே காரணம்,” என்றாள் மண்டோதரி.
இவளைச் சாதாரணப் பெண்ணாக நினைத்துவிட்டதை எண்ணி இராவணன் சற்று வெட்கினான். அவன் இவற்றை ஏற்கனவே கண்டிருந்தான். தன் மனைவி அதை அச்சுப்பிசகாமல் எடுத்துரைத்தது அவனுக்கு வியப்பளித்தது.
“அரசே, வியப்பு வேண்டாம். இந்த இலங்கை நகரம் முதலில் தங்கள் தமன் குபேரனின் ஆடம்பரங்களுக்காக வடிவமைக்கப்பட்ட நகரம். அதை நீங்கள் பறித்துக்கொண்ட பின், தங்களின் அதீத வலிமையின் நம்பிக்கையாலும், இலங்கினி காப்பாள் என்ற அசட்டுத்தன நம்பிக்கையாலும் விட்ட அத்தனை பாதுகாப்புப் பலவீனங்களும் இப்போது நம்மை இந்தப் பேரழிவுக்கு உள்ளாக்கியிருக்கின்றன.”
“அடுத்து என்ன செய்ய வேண்டும், உன் திட்டம் என்ன?” என்றான் இராவணன்.
“தேவத்தச்சன் விஸ்வகர்மாவும், என் தந்தை மயனும் சேர்ந்து இந்த நகரை மீள்நிர்மாணம் செய்ய வேண்டும். கடலோரப் பகுதிகள் பெரும் மதில் சுவர்களால் காக்கப்பட வேண்டும். நான்கு நுழைவாயில்களின் நிலத்தடியிலும் தனித்தனி ஆயுதக் கிடங்குகள் அமைய வேண்டும். ஒரு பகுதி அழிந்தாலும், மற்ற பகுதிகள் போரிட வேண்டும். இராணுவப் பாசறைகள் நகரின் எல்லையோர மதில்களை ஒட்டியும், பொதுமக்களின் வாழ்விடங்கள் மையப்பகுதியிலும் பிரிக்கப்பட வேண்டும்.”
இராவணன் தன்னை மறந்து கைதட்டினான்.
“பலே சக்கரவர்த்தினி, பலே!” என்ற இராவணன்,
“இலங்கைப் பாதுகாப்புக்கு இது போதும். நான் கண்டதை அப்படியே நீயும் கண்டிருக்கிறாய். மயனும் விஸ்வகர்மாவும் உடனடியாக வேலையைத் தொடங்கட்டும்,” என்றான்.
“அது மட்டும் போதாது அரசே, இன்னுமொன்று மிச்சமிருக்கிறது,” என்றாள் பீடிகையுடன்.
“என்ன அது?” என்றான் இராவணன் சந்தேகத்துடன்.
“உள்ளுக்குள் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பு ஒன்று. அந்த நெருப்பு இருக்கும் வரை இந்த இலங்கைக்கு என்றும் பாதுகாப்புக் கிடையாது,” என்றாள் சீதையை மனதில் நினைத்தபடி.
“ஆம்… ஆம்… அந்த நெருப்பை அணைக்கத்தான் வேண்டும் தேவி…” என்றான் இராவணன், வெறுப்புடன் விபீஷணன் மீது தன் கண்களை நிலைநாட்டியபடி.
“சரி, உத்தரவுகள் உன் ஆணைப்படி செல்லட்டும். இந்த இலங்கை புதுப்பொலிவு காணட்டும்,” என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் இராவணன்.
மறுநாள் விடியற்காலையில் வேலைகள் தொடங்கின. இலங்கையின் கடற்கரையில் மயனும் விஸ்வகர்மாவும் நின்றிருந்தார்கள். உருகி வடிவிழந்த தங்கக் கட்டிகளும், உடைந்த வைரக் கற்களும் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.
இரு பெரும் மேதைகளின் மூளைகளும் ஒன்றாக வேலை செய்யத் தொடங்கின.
விஸ்வகர்மா அரிதானதும் விசித்திரமானதுமான வெண் படிகக் கற்களைக் கொண்டு வந்தான். இலங்கையின் நான்கு பிரதான கோட்டைகளுக்கும் அந்தப் படிகங்களே அடித்தளமாயின. எரியாத, தகர்க்க முடியாத கருங்கற் பாறைகளை அசுரப் படைகள் கடலடியில் உள்ள எரிமலை அடிவாரங்களில் இருந்து தோண்டி எடுத்தன. விஸ்வகர்மா தன் கைகளால் அந்தப் பாறைகளைச் செதுக்கி, பிரம்மாண்டமான மதில்களை எழுப்பினான்.
மறுபுறம், மயன் கிழக்குப் பக்கத்து நுழைவாயிலில் நுழைந்தால், அது நேராக வடக்குக் கோட்டைக்குச் செல்வது போல ஒரு மாயப் பாதையை உருவாக்கினான். எதிரிப் படைகள் உள்ளே நுழைந்தால், அவர்கள் தங்கள் சொந்த நிழல்களையே எதிரிகள் என்று எண்ணும்படி கண்ணாடிகள் நிறைந்த விசித்திர அரங்கை அமைத்தான்.
மதிய வேளையில், கருகிய அரண்மனைத் தூணின் நிழலில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, மயன் விஸ்வகர்மாவைப் பார்த்துக் கேட்டான்.
“தேவத்தச்சரே! நாம் இருவரும் ஒன்றாக வேலை செய்வோம் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீரா?” என்றான் மயன்.
“விதி எதையும் நடத்திக் காட்டும் அசுர சிற்பியே! படைப்பவனுக்குத் தேவன், அசுரன் என்ற பேதமில்லை; அவனுக்குத் தேவை எல்லாம் அவனது கலை வெளிப்பட ஒரு களம் மட்டுமே,” என்ற விஸ்வகர்மாவின் குரலின் உள்ளே லேசான வேதனை ஒளிந்திருந்தது.
இருந்தும் இரண்டு பேராற்றல்கள் இணையும் போது அங்கே அற்புதம் நிகழ்ந்தது. மூன்றாம் நாள் இரவு, இலங்கை நகரம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டிருந்தது.
அனுமன் எரியூட்டியதற்கான எந்த ஒரு அடையாளமும் அங்கே இல்லை. மாறாக, முன்பு இருந்ததை விடவும் பத்து மடங்கு பிரம்மாண்டமாய், ஒளிரும் தங்கத்தாலும், நீலக் கற்களாலும் ஆன ஒரு புதிய சொர்க்கம் கடலின் நடுவே நிமிர்ந்து நின்றது.
கோட்டையின் நான்கு வாசல்களும், நான்கு திசைகளில் பெரும் பாதுகாப்பின் உச்ச சக்தியோடு இணைக்கப்பட்டிருந்தன.
வெளியில் தெரியாதவண்ணம் இயங்கும் விற்பொறிகள், எரிகற்களை வீசும் இயந்திரங்கள், நெருப்பைக் கக்கும் யாளி வடிவப் புதுவகை இயந்திரங்கள் என இலங்கை மாபெரும் பாதுகாப்புக் கோட்டையாக மாறியிருந்தது.
மண்டோதரி நகர்வலம் வந்து பார்த்தாள். அவள் கண்கள் பனித்தன. தன் தந்தையையும், தேவத்தச்சனையும் நோக்கிக் கைகூப்பினாள்.
“இருவருக்கும் என் நன்றி, இந்த நகரம் மனிதர்களால் வெல்லப்பட முடியாத ஒன்றாக மாறிவிட்டது. என் மக்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளீர்கள்,” என்றாள் மண்டோதரி. மயன் தன் மகளின் தோளைத் தொட்டுச் சொன்னான்.
“இல்லை மண்டோதரி… கோட்டைகள் எவ்வளவு பலமாக இருந்தாலும், கோட்டையின் உள்ளே இருக்கும் மனங்கள் அறத்தை இழந்துவிட்டால், எந்த மாயத்தாலும், கடினமானப் பாறையாலும் நகரைக் காப்பாற்ற முடியாது. நாம் வெளியிலிருக்கும் கோட்டையைச் சீரமைத்துவிட்டோம். ஆனால் இராவணன் தன் உள்ளுக்குள் இருக்கும் அறச் சிதைவைச் சீரமைக்காத வரை, இந்த நகரம் பாதுகாப்பற்றதுதான்.”
அன்று இரவு, புதுப்பிக்கப்பட்ட இலங்கையின் மாடத்து உச்சியில் நின்று இராவணன் தன் நகரத்தைப் பார்த்தான். மாலை ஆதவனின் கதிர்களில் இலங்கை பெரும் பொலிவுடன் செம்பொற் குழம்பு போலக் காட்சி அளித்தது. இராவணனின் நெஞ்சு பெருமிதத்தால் விரிந்தது.
“இனி இலங்கை, எதிரிகள் யாராலும் தொட முடியாத நெருப்பு… பெரு நெருப்பு!” என்றான், விதி தன் வலையை விரித்துக் காத்திருப்பதை அறியாமல்.
(தொடரும்)