Home நாவல்அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 20: சஞ்சலத் தீ

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 20: சஞ்சலத் தீ

by Iyappan Krishnan
0 comments
This entry is part 61 of 62 in the series அசுரவதம்

மகேந்திர மலையின் உச்சியில், கடலின் ஓயாத இரைச்சலுக்கு நடுவே ஒரு மாபெரும் நிசப்தம் உறைந்திருந்தது.

சுக்ரீவன் விதித்த ஒரு மாதக் காலக்கெடு முடிவடைந்திருந்தது. தென்திசை நோக்கிச் சென்ற அங்கதனும், ஜாம்பவானும், மற்ற வானர வீரர்களும் சீதையைக் கண்டுபிடிக்காமல் திரும்பினால் மரண தண்டனை உறுதி என்ற சுக்ரீவனின் ஆணை, அவர்களின் கழுத்தின் மீது கண்ணுக்குத் தெரியாத வாளாகத் தொங்கிக்கொண்டிருந்தது.

ஆனால், தண்டனைக்குப் பயந்து சாவதை விட, இராமனின் தர்மத்திற்காக உயிர்விடுவதே மேல் என்று அந்த வானரப் படை முடிவெடுத்திருந்தது.

தர்மத்தின் சுமை தாங்க முடியாதபோது, உயிர் வாழ்வது ஒரு சாபம். அறம் தோற்கும் இடத்தில், அந்த அறத்தின் சாட்சிகள் தற்கொலை செய்துகொள்வதே தர்மம் என்று அவர்கள் நம்பினார்கள்.

அங்கதன் தன் கண்களை மூடிப் பாறையின் மீது அமர்ந்திருந்தான். ஜாம்பவான் தன் முதுமையின் தளர்ச்சியோடும், ஆனால் மாபெரும் ஞானத்தோடும் கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் கண்களில் நம்பிக்கை குறையவில்லை.

“பொழுது சாயப்போகிறது ஐயா ஜாம்பவானே, காலக்கெடு முடிந்துவிட்டது. இனி நாம் உயிருடன் திரும்புவதில் எந்தப் பொருளுமில்லை. தர்மத்தின் பணியை முடிக்க முடியாத இந்தக் கைகள், இனி உணவை ஏந்தத் தகுதியற்றவை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தல் செய்து, அல்லது இந்தக் கடலில் குதித்து நம் உயிரைத் தியாகம் செய்வோம்” என்றான் அங்கதன் விரக்தியின் உச்சத்தில்.

அந்த வார்த்தைகள் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான வானரங்களின் நெஞ்சிலும் ஒரு மாபெரும் துயரத்தை ஏற்படுத்தின. ஆனால், யாரும் அந்த முடிவை மறுக்கவில்லை. மரணம் அவர்களுக்கு அச்சத்தைத் தரவில்லை; ஆனால், இராமனுக்குத் தாங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வுதான் அவர்களைத் தின்றுகொண்டிருந்தது.

“அனுமன் வருவான்… நம்புங்கள்” என்ற ஜாம்பவானின் ஒற்றைச் சொல்லை யாரும் பொருட்படுத்தவில்லை.

ஒரு இலட்சியத்திற்காகத் தங்களை அழித்துக்கொள்ளும் கூட்டம் எப்போதும் ஒருவித வெறியோடு இருக்கும். அந்த வானரங்களும் இப்போது அந்த வெறியின் பிடியில்தான் இருந்தனர். கடலை நோக்கி அவர்கள் நடக்கத் தொடங்கினர்.

சரியாக அந்தத் தருணத்தில்…

தெற்கிலிருந்து ஒரு மாபெரும் சூறாவளிக் காற்று வீசியது! அந்தப் புயலின் வேகத்தில் மகேந்திர மலையின் மரங்கள் வேரோடு உலுக்கப்பட்டன. அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன.

வானத்தில் ஒரு கரிய மாமலை பறந்து வருவதைப் போல ஒரு பிரம்மாண்டமான நிழல் விழுந்தது. அடுத்த கணம், அவன் தரையைத் தொடுவதற்கு முன்பே, அவன் வந்த அசுர வேகத்தால் காற்றைக் கிழித்துக்கொண்டு ஒரு மாபெரும் வெற்றிடமும், பேரழுத்தமும் உருவானது.

அந்தப் பிரளயக் காற்றின் விசை, சாகத் துணிந்து நின்றிருந்த பல்லாயிரக்கணக்கான வானரங்களை அப்படியே தரையிலிருந்து சருகுகளைப் போல மேலே தூக்கி அந்தரத்தில் வீசியது!

பேரொலியோடு மகேந்திர மலையின் உச்சியில் வந்து குதித்தான் அனுமன். அவன் கால்கள் பட்ட வேகத்தில் மலையின் ஒரு பகுதியே அதிர்ந்து கடலுக்குள் சரிந்தது. காற்றில் தூக்கி வீசப்பட்ட வானரங்கள் நிலைகுலைந்து மீண்டும் தரையில் விழுந்து சுதாரிப்பதற்குள், அங்கே ஒரு மாபெரும் வெற்றிச் சிலையாக நின்றிருந்தான் வாயு மைந்தன்.

நடப்பது என்ன ஏது என்று அறியாமல் காற்றில் பறந்து விழுந்த வானரப் படை ஒரு கணம் திகைத்து நின்றது. அங்கே நின்றிருந்த மாருதியின் உடல் முழுவதும் கரியும் சாம்பலும் படிந்திருந்தது. அவனது கண்களில் ஒரு மாபெரும் போரைச் சந்தித்து மீண்ட வீரனின் கர்வம் ஒளிர, வாலின் நுனியில் மட்டும் ஈரம் கசிந்துகொண்டிருந்தது.

“நண்பனே… அனுமா!”

என்று கூவிக்கொண்டு அங்கதனும் ஜாம்பவானும் ஓடி வந்தனர்.

“என்ன ஆயிற்று? உன் உடலெல்லாம் ஏன் இந்தக் கரி படிந்திருக்கிறது? நீ அங்கே எதைக் கண்டாய்?” என்று பதற்றத்தோடு வினவினர்.

அனுமன் எந்தப் பதிலும் சொல்லாமல் புன்னகைத்தான். ஆனால், அந்தப் புன்னகைக்குள் மாபெரும் இரகசியம் ஒன்று ஒளிந்திருப்பதை ஜாம்பவான் உணர்ந்துகொண்டார்.

அனுமன் ஒரு மாபெரும் காரியத்தைச் சாதித்துவிட்டு வந்திருக்கிறான் என்பதை அவனது உடல்மொழியே காட்டிக்கொடுத்தது. அங்கு நின்றிருந்த மூத்த வானரர்கள் சிலர், ஓடிச் சென்று மலையின் மூலிகைகளையும் பூக்களையும் பறித்து வந்து, ஒரு மாபெரும் இலைத் தட்டில் வைத்து, வெற்றியைச் சூடி வந்த மாருதிக்கு ஆரத்தி எடுத்து வணங்கினர்.

ஒரு கடவுளுக்குக் காட்டும் மரியாதையை அந்த எளிய வானரங்கள் அவனுக்குச் செய்தனர். அவன் அவர்கள் உயிரை மட்டுமல்ல, இராமனின் உயிரையும் காக்க வந்திருக்கிறான் என அவர்களின் உள்ளுணர்வு உணர்த்தியது.

அனுமன் மெல்லச் சிரித்துக்கொண்டே, தன் கைகளில் படிந்திருந்த சாம்பலை எடுத்து, அங்கதன் மற்றும் ஜாம்பவானின் நெற்றியில் ஒரு திலகமாக இட்டான்!

“இது சாதாரணச் சாம்பலல்ல இளவரசே… இது இராவணனின் செருக்கு அழிந்து உருகியதனால் வந்த சாம்பல்; இலங்கையின் தங்க மாளிகைகள், கூட கோபுரங்கள், ஆயுத சாலைகள் என அவை வெந்து தணிந்த சாம்பல்” என்று இடிமுழக்கக் குரலில் சொன்னான் அனுமன்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் வானரப் படைக்குள்ளே மாபெரும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு அதிர்வு உண்டானது.

இராவணனின் இலங்கையை மாருதி எரித்துவிட்டான் என்ற செய்தி, அவர்களின் விரக்தியைப் பிளந்துகொண்டு மாபெரும் வெற்றிக் கூச்சலாக மாறியது.

ஆனால், அங்கதனின் நெஞ்சம் அந்தச் செய்தியால் முழுமையாக அமைதியடையவில்லை. அவனுக்கு இலங்கை எரிந்தது பற்றி எந்தக் கவலையும் இல்லை. அதைச் செய்து முடிக்கக்கூடிய வலிமை அனுமனுக்கு உண்டு என்பதில் எள்ளளவும் அவனுக்கு ஐயம் இல்லை. அவனது ஒரே கேள்வி, அவர்கள் எதற்காக இவ்வளவு காலம் தவம் கிடந்தார்களோ… அதற்கான விடை கிடைத்ததா என்பது மட்டும்தான்.

அங்கதன் அனுமனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். அவனது குரல் தழுதழுத்தது.

“இலங்கை எரிந்ததும், அரக்கர்கள் மாண்டதும் எனக்கொரு செய்தியல்ல அனுமனே! எனக்கும், நம் இராமனுக்கும் தேவை ஒற்றைச் சொல்தான்! நீ சீதாதேவியைக் கண்டாயா? அவள் உயிருடன் இருக்கிறாளா? அவளின் நிலையென்ன? சொல் அனுமா… உன் சொல்லில் உயிர்த்திருக்கிறது அறமும், இராம இலக்குவர்களின் வாழ்வும், நம் வானர சேனைகளின் உயிர்களும்” என்று கதறினான்.

அங்கு கூடியிருந்த அத்தனை வானரங்களும் மூச்சை அடக்கிக்கொண்டு அனுமனின் முகத்தையே வெறித்துப் பார்த்தனர். காற்றின் சலசலப்பு கூட அந்த நேரத்தில் நின்றுபோனது.

அனுமன் மெல்லக் கண்களை மூடினான். தன்னைச் சுற்றியிருக்கும் உணர்ச்சிகள் உச்சத்தில் இருக்கும்போது அதை ஒரு சாட்சியாக நின்று பார்ப்பதுதான் அனுமனின் இயல்பு. அவர்களின் எதிர்பார்ப்பு அவனுக்கு வியப்பளிக்கவில்லை. அதே நேரம் அத்தனை உணர்ச்சிக் கொந்தளிப்பின் காரணத்தையும் அனுமன் உணராமல் இல்லை.

அனுமன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். மெல்லக் கண்களைத் திறந்த அனுமன், அங்கதனைப் பார்த்து அந்த ஒற்றை வார்த்தையை உச்சரித்தான்:

“கண்டேன்!”

அனுமனின் அந்தச் சொல் கேட்டதும் வானரங்கள் தங்களின் பலநாள் தவம் பலித்தது போல மகிழ்ச்சிக் கூத்தாடின.

மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டவர்கள், மாபெரும் வெற்றிப் பெருமிதத்துடன் இராமனை நோக்கிய தங்களின் நெடும்பயணத்தைத் தொடங்கினர்.

அந்த வெற்றிப் பயணத்தின் வழியில், சுக்ரீவனின் பாதுகாக்கப்பட்ட ‘மதுவனத்தில்’ புகுந்த வானரப் படை, தங்களின் பசியையும் தாகத்தையும் போக்கிக்கொண்டு, வனத்தையே அழிக்கும் அளவுக்குத் தங்கள் வெற்றிக் களிப்பைக் கொண்டாடியது. தாங்கள் கொண்டு செல்லும் நற்செய்தி, இராமனின் உயிரைக் காக்கும் அமுதம் என்ற கர்வம் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தெரிந்தது.

ஆனால், அந்த வெற்றிப் பேரானந்தம் கிஷ்கிந்தையை அடைந்ததும் சுக்குநூறாக உடைந்தது.

வானரப் படையின் ஆரவாரத்தைக் கேட்டு ஓடி வந்த சுக்ரீவனின் முகத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லை. அவனது கண்கள் கலங்கியிருந்தன. அவனது உடல் தவிப்பில் நடுங்கிக்கொண்டிருந்தது.

“அனுமா, என் இனிய தோழனே! நீ கொண்டுவந்த இந்த வெற்றிச் செய்தி இப்போது நல்ல பலன் தருமா என்று தெரியவில்லை…” என்று உடைந்த குரலில் சொன்னான் சுக்ரீவன்.

அனுமன் திகைத்தான். “அரசே, என்ன சொல்கிறீர்கள்? எம்பெருமான் இராமன் எங்கே?”

“இராமன்… இராமன்…” என்று மேலே பேச முடியாமல் திணறினான் சுக்ரீவன்.

அனுமனுக்கு உலகமே சுழன்றது. என்ன ஆனது இராமனுக்கு? வெற்றிச் செய்தியோடு வந்த தன்னை வரவேற்க வராமல் இராமன் எங்கே போனார்? எப்பேர்ப்பட்ட அரக்கனையும் வீழ்த்தும் அந்த மாவீரனுக்கு இந்தச் சிறிய காட்டிற்குள் என்ன ஆபத்து வந்திருக்க முடியும்?

விளங்காத ஒரு மாபெரும் அச்சம் நெஞ்சை அடைக்க, “எந்தையே இராமா…” என்று கதறியபடி, இராமன் இருந்த திசை நோக்கிப் பாய்ந்து விரைந்தான் மாருதி.

அங்கே அவன் கண்ட காட்சி, பெருமலையைத் தூக்கிய அந்த வாயு மைந்தனை வேரோடு உலுக்கி எடுத்தது.

(அசுரவதம் பாகம் 3 நிறைவுற்றது

அசுரவதம்

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 19:  புனரபி ஜனனம், புனரபி மரணம்..

Author

You may also like

Leave a Comment