அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 16:  அணக்க நகரம்

This entry is part 57 of 58 in the series அசுரவதம்

“அது மரணத்தை விடக் கொடியது!”

இராவணனின் அந்த வார்த்தைகள் அரக்கர் சபையில் ஒரு மாபெரும் ரத்தவெறியைத் தூண்டின.

அனுமன் நகைத்தான். அதுவரை அனுமனின் வீரத்தைக் கண்டு உள்ளூர அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அரக்கர்களின் கூட்டம், இப்போது மாபெரும் ஆரவாரம் செய்தது.

தங்களின் இயலாமையை, தோல்வியை மூடிமறைக்க, அவர்களுக்குக் கொடூரமான ஒரு கேளிக்கை தேவைப்பட்டது.

தனக்குச் சமமான ஒரு வீரனை நேருக்கு நேர் சந்திக்கப் பயப்பட்ட அந்த கோழைகள், அவன் வீழ்ந்துகிடப்பதாக எண்ணி அவனை அவமானப்படுத்துவதில் உச்சகட்ட இன்பம் அடைய முயன்றனர். சிம்மத்தை வீழ்த்த முயலும் கழுதைப்புலியைப் போல அனுமனைச் சூழ்ந்தனர்.

இராவணன் உத்தரவிட்டான்.

“வீரர்களே, இந்தக் குரங்கை அசையவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். எந்த வாலைக் கொண்டு என்னை அவமானப்படுத்தினானோ, அந்த வாலில் கந்தலைச் சுற்றி தீயிடுங்கள்” என்றான்.

அரக்கர்கள் உற்சாகத்தோடு அனுமனை நோக்கி ஓடினர். ஆனால், வாலின் இருக்கையில் அமர்ந்திருந்த அனுமனின் முகம் சலனமற்று இருந்தது. அவன் இருக்கையை விட்டு கீழிறங்கி, பழைய நிலைக்குத் திரும்பிச் சிறு வானரமாக நின்றான்.

இராவணனைப் பார்த்துச் சொன்னான்:

“வேண்டாம் இராவணா, இது விபரீதமாகும்” என்றான் அனுமன்.

அவனின் அந்த வார்த்தை பயத்தினால் வந்தது என்று அரக்கர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். துணிகளைக் கொண்டுவந்து அனுமனின் வாலில் சுற்றத் தொடங்கினர்.

“நெருப்பு அணைந்துவிடும் இராவணா, அதன் விளைவு… கொடூரமானதாக இருக்கும்” என்றான் அனுமன் மீண்டும்.

இராவணனும் அந்த ஒரு கணத்தில் அனுமன் பயத்தில் பிதற்றுவதாக நினைத்தான்.

“அட பித்துபிடித்த வானரமே, நான் இடப்போகும் இந்த நெருப்பு, பிரம்மனின் வரத்தால் கிடைத்தது. இதை அணைக்க யாராலும் முடியாது. அதை அணைக்கும் ஒரே வழி, வாயில் ஊறும் எச்சில். அந்த எச்சில் பட்டதும்தான் அணைக்க முடியும்.”

அளவிலா செருக்குடன் அவன் சொன்ன சொல்லில் அவன் தவறி வெளியிட்ட விவரங்கள் அனுமனுக்கு மேலும் உற்சாகமூட்டின. அவன் எண்ணம் அரக்கர்கள் தன்னைப் பிணைத்துக்கொண்டுவந்த இலங்கை நகரின் வீதிகளை நினைவுக்குக் கொண்டுவந்தது.

அரக்கர்கள் துணியைச் சுற்றச் சுற்ற, அனுமன் தன் வாலினை நீட்டிக்கொண்டே சென்றான். வாலின் நீளம் வளர வளர, அரக்கர்கள் கொண்டு வந்த துணிகள் அனைத்தும் தீர்ந்தன.

அசோகவனத்தில் அங்கே சீதை பதற்றம் முகத்தில் பூரணமாக இருக்க, திரிசடையை வினவினாள்.

“என்ன ஆனது, அப்புறம் சொல் திரிசடை” என்றாள்.

“என் பிரிய தோழியே, அவர்கள் அனுமனின் வாலுக்குக் கந்தைகளைச் சுற்றினார்கள். ஆனால் அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது” என்ற திரிசடையை இடைமறித்துக் கேட்டாள் சீதை.

“என்ன அதிசயம், அவர்களை அனுமன் சாய்த்துவிட்டானா?” என்ற சீதையின் குரலில் அன்னையின் பரிதவிப்பு இருந்தது.

“இல்லையம்மா, அனுமனின் வால் வளர்ந்துகொண்டே போனது. ‘இன்னும் துணிகளைக் கொண்டு வாருங்கள்’ என்று பெரியப்பா இராவணன் உத்தரவிட, நகரத்தின் துணிகள் தீர்ந்தன; அரண்மனைக் கிடங்குகளின் துணிகள் தீர்ந்தன.”

சீதைக்கு அனுமன் ஏதோ விளையாட்டைத் தொடங்கி இருக்கிறான் என்பது புரிந்தது. அவள் மெல்ல நிதானத்துக்கு வந்தாள்.

“விட்டால் மக்களின் துணிகளையும் பறித்திருப்பானோ அந்தக் கொடியவன்!” என்றவளின் குரலில் சினம் புகுந்திருந்தது.

“ஆம், உண்மையில் அதுதான் நடந்தது. வீரர்கள் கட்டுப்பாடற்று அந்தப்புரத்திற்குள் புகுந்து, அங்கே இருந்த அரக்கிகளின் ஆடைகளையும் பிடுங்கிவந்து வாலில் சுற்றினர்.”

சீதை அந்த பைத்தியக்காரச் செயலை நினைத்துச் சிரித்தாள்.

“உன் ஆடையைக் காப்பாற்ற என்னிடம் ஓடி வந்தாயா திரிசடை?” என்றாள் உரிமையும் கிண்டலும் சேர.

“அரசமகளிர்களை அவர்கள் தொடவில்லை. ஆனாலும் அவர்களின் செயல் அரண்மனையோடு நிற்கவில்லை தோழியே, நகரத்து மாந்தர்கள் அனைவரின் துணியும் பறிக்கப்பட்டுவிட்டன” என்று சொல்ல வாய்க்கூசியவள் போல் தலைகுனிந்து மெல்லிய குரலில் சொன்னாள் திரிசடை.

தொடர்ந்தாள்:

“அந்த வால் எங்கு நீள்கிறது என்று தெரியவில்லை. அரண்மனை வளாகங்கள் எல்லாவற்றையும் வாலினால் அந்த வானரம் அளந்துவிட்டது அம்மா” என்று முடித்தாள் திரிசடை.

அனுமனின் எண்ணம் புரிந்தது சீதைக்கு. எண்ணெயிட்டு நெருப்பிட்டால் அந்த அரண்மனை முழுக்க நெருப்பு பற்றி எரியும்; இராவணன் அரண்மனை அழியும் என்று ஒரு கணம் யோசித்தவள் திடுக்கிட்டவள் போல,

“அந்த நெருப்பு அனுமனையும் சுடுமே!” என்றாள் வேதனையுடன்.

“ஆம் அம்மா, அந்த நெருப்புக் கடவுள்தான் அந்த வானர வீரனைக் காப்பாற்ற வேண்டும்” என்றாள் திரிசடை.

சீதை தன் மனதை ஒருமுகப்படுத்தினாள்.

“தூய்மையின் வடிவே, அறத்தின் ஆதாரச் சுருதியே, ஆதவனின் அணுக்கனே, உன்னை வணங்குகிறேன். என் நாயகன் சாட்சியாக, என் கற்பின் சாட்சியாக, உலக அறத்தின் சாட்சியாக உன்னிடம் இதைச் சொல்கிறேன். வெம்மை உனது பண்பு, தீமைகளை அழிக்கும் செயல் போல நீ மைந்தன் அனுமனை அணுகக் கூடாது. உன் வெம்மையைக் குறைத்து அனுமனுக்கு ஆதரவளி” என்று மனமுருகி வேண்டினாள்.

அரண்மனையில் அனுமனின் வாலுக்கு நெருப்பு வைப்பதற்கு முன்பே, இராவணனின் நகர மக்கள் தன் மானத்தையும் ஆடையும் இழந்து நின்றிருந்தனர். அவர்களுக்கு அதைத் தாண்டிய வெறியாக, அனுமனின் வால் நெருப்பில் வெந்து வாடும் காட்சிக்காக ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர்.

இராவணன் பிரம்மனின் அந்த நெருப்பை ஒரு அம்பில் ஏற்றிக் கொடுக்க, படைத்தளபதி ஒருவன் அனுமனின் வாலில் எண்ணெயை ஊற்றித் தீயை வைத்தான். தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அனுமன் கைகூப்பி அந்த நெருப்பை ஏற்றான். அந்தக் கூட்டம் அதை பயத்தின் செயலாகக் கருதியது.

நெருப்பு என்பது அறத்தின் சாட்சி. அது சீதையின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, வெம்மையை அனுமனுக்கு மட்டும் விலக்கிக்கொண்டது. வாலில் தீ கொழுந்துவிட்டு எரிந்தாலும், அனுமனுக்கு அது பனித்துளியைப் போலக் குளிர்ந்திருந்தது. அன்னையின் ஆசி தன்னை அரணாகக் காப்பதை அனுமன் உணர்ந்துகொண்டான்.

அடுத்த கணம், வானளாவிய பேருருவம் எடுத்தான் அனுமன்!

அரக்கர்கள் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள், கொலுமண்டபத்தின் சிம்மாசனப் படியை ஓங்கி உதைத்துத் தள்ளிவிட்டு, ஒரு மாபெரும் பாய்ச்சலில் மண்டபத்தின் கூரையை உடைத்துக்கொண்டு வானில் எழும்பினான்.

அரண்மனைக்குள் எங்கெல்லாம் வால் சென்றதோ அங்கெல்லாம் தீப்பற்றி எரிந்தது. நீரூற்றி அணைக்க முயல, அது நெய்யூற்றியது போல இன்னும் கொழுந்துவிட்டு எரிந்தது.

ஒரு மாளிகையின் கூரையிலிருந்து மற்றொரு கூரைக்குத் தாவிய அனுமன், தன் நீண்ட வாலை ஒரு பிரம்மாண்டமான நெருப்புச் சாட்டையைப் போலச் சுழற்றினான். தான் வந்த நகரச் சாலைகள் ஒன்றுவிடாமல் அத்தனையும் அவன் வாலின் தீண்டலில் இருந்து தப்பவில்லை.

பெரும் ஆயுதக் கூடங்கள், பராமரிப்புச் சாலைகள், பயிற்சிக் கூடங்கள், உணவு சேகரிப்புக் கூடங்கள் என அத்தனையும் தீப்பற்றிக்கொண்டன.

அனுமன் சுழற்றிய அந்த நெருப்புச் சாட்டை லங்கையின் தங்க மாளிகைகளின் மீது படும்போதெல்லாம், அந்த மாளிகைகள் பெரும் சத்தத்தோடு வெடித்துச் சிதறின.

பொன் மாளிகைகள் மெழுகு போல உருகி, இலங்கையின் வீதிகளில் தங்க நதியாக ஓடின. அந்தத் தீயில் லங்கையின் காவல் பூதங்களும், அசுர கணங்களும் கருகிக் கதறின.

தெருக்களில் ஓடிய குதிரைகளும், யானைகளும் தீயின் நாக்குகளில் சிக்கி அலறின. எங்கும் மரண ஓலம்; எங்கும் சாம்பல் வாடை. மாபெரும் அரக்க வீரர்களெல்லாம் தீயின் வெம்மை தாளாமல் வீதிகளில் உருண்டு துடித்தனர்.

எரியும் அந்த மாபெரும் நகரின் கோரமுகம், ஒரு பேரழிவின் தத்துவத்தைக் காட்டியது. ஒரு நகரத்தின் ஒட்டுமொத்தப் பாவமும் தீயாக மாறி, அந்த நகரத்தையே தின்று செரித்துக்கொண்டிருந்தது.

அரண்மனைக்குள் இருந்த இராவணனால் கூட அந்த வெம்மையைத் தாங்க முடியவில்லை. அவனது ஆடம்பரமான அரண்மனையும் அந்தப்புரமும் கண்முன்னே தீக்கிரையாயின. தன் சொந்தக் கோட்டைக்குள் தன்னால் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை என்ற நிதர்சனம் புரிந்தது.

வீரர்களும், மந்திரிகளும் இலக்கற்று நாலாபுறமும் சிதறி ஓடினர். இராவணன் கோபத்தின் உச்சிக்குச் சென்றான். ஆனால், அவனால் அந்த நெருப்போடு போர் செய்ய முடியவில்லை. அவனது வாள் நெருப்பின் முன் வீணானது. வேறு வழியின்றி, இராவணன் தப்பிப்பதற்காகத் தன் பிரம்மாண்டமான ‘புஷ்பக விமானத்தை’ வரவழைத்தான். அதில் ஏறி, இலங்கையின் வானில் மிக உயரத்திற்குச் சென்றான்.

வானத்தின் உச்சியில், புகையோட்டத்திற்கு மேலே நின்றபடி அவன் கீழே பார்த்தான். தேவத் தச்சன் மயனால் செதுக்கிய அந்த மாய நகரம், தேவர்களையும் மூவுலகையும் மிரட்டிய அவனது மாபெரும் சாம்ராஜ்ஜியம், இப்போது உருகிய தங்கக் குழம்பாகவும், சாம்பல் மேடாகவும் அவனது கண்முன்னே உருமாறிக் கொண்டிருந்தது.

அவன் விண்ணில் இருந்து கண்டதில் இலங்கையின் இரண்டு இடங்கள் மட்டும் தீயில் இருந்து தப்பி இருந்தன. ஒன்று அசோகவனம், மற்றது விபீஷணனின் குடில். அவன் நெஞ்சில் விபீஷணன் குறித்த சந்தேகம் என்னும் விஷம் இராவணன் உள்ளத்தில் ஊறத் தொடங்கியது.

வானில் இருந்து கத்தினான் இராவணன்:

“விபீஷணா, நீயொரு துரோகி!

(தொடரும்)

அசுரவதம்

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 15:  அட இராவணா

Author

Related posts

அறிவெழுச்சி: 16

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 16

பட்டாம்பூச்சிகளின் நடனம்