Home நாவல்அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 13:  நிலமே அம்மியாக, உடல் குழவியாக

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 13:  நிலமே அம்மியாக, உடல் குழவியாக

by Iyappan Krishnan
0 comments
This entry is part 54 of 55 in the series அசுரவதம்

இருள் நிறைந்து அடர்ந்து நின்றிருந்த மாபெரும் அசோகவனத்தின் பெரும்பகுதி சிதைக்கப்பட்டிருந்தது.

வானுயர்ந்த மரங்கள் எல்லாம் சிதறித் துண்டாகிக் கிடந்தன. சிதைந்து வீழ்ந்து கிடந்த மரங்களின் கீழே பல நூறு அரக்க வீரர்கள் மாண்டு கிடந்தனர்.

அனுமன் திருப்தியாக அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான். “இது போதும் இராவணனை வெளியே கொண்டுவர” என்று லேசாக நகைத்தான்.

உண்மையில் சீதையிடம் இருந்து விடைபெற்ற அனுமன், அசோகவனத்தின் இருண்ட அடர்ந்த பகுதிக்குள் நுழைந்தான். அவனது அகம் இப்போது ஒரு தெளிந்த நீரோடையைப் போலிருந்தது.

“அனுமா, என்னை நீ சந்தித்ததன் அடையாளமாக இந்தச் சூடாமணியைக் கொண்டு செல்” என்று சீதை கொடுத்த அந்தச் சூடாமணியை ஒரு மரக்கிளையில் வைத்து, சீதை எதிரில் இருப்பது போலவே வணங்கினான். பின் அதை மிகுந்த கவனத்துடன் தன் இடைக் கச்சையில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

‘எதிரியின் பலத்தை அறிவது உன்னை நீயே கண்ணாடியில் பார்ப்பது போன்றது’ என்று அன்னை சொன்ன வார்த்தைகள் அவனது மனதிற்குள் ரீங்காரமிட்டன.

இராவணனை நேரில் சந்திக்க வேண்டும்; அவனது பலத்தை, அவனது சபையின் வலிமையை நேரில் அளவிட வேண்டும். அதற்கு இந்த நாடகம் தேவை என்று உறுதியாகத் தன் செயல்களைத் தொடங்கினான்.

அனுமனுக்கு இப்போது பசித்தது. அது உணவுக்கான வயிற்றுப் பசியில்லை; தூதனின் அறிவுப் பசி.

எல்லாவற்றையும் விட, அன்னை இத்தனை மாதங்களாகச் சிறைவைக்கப்பட்டு, கண்ணீர் வடித்துத் துன்புற்ற இந்த வனம், அடர்ந்து இருள் படர்ந்து சிறையாக இருக்கக்கூடாது என்று கவனமாக இடைவெளி கொடுத்து வனத்தை அழிக்கத் தொடங்கினான்.

முதலில் பழங்களைப் பறித்துத் தின்பது போல அனுமன் தன் செயலைத் தொடங்கினான். ஆரம்பத்தில் சாதாரண ஒரு குரங்கின் இயல்பான பசியைப் போலத் தொடங்கிய அவனது செயல்கள், காவலர்கள் அவன் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதும் அடுத்த சில நாழிகைகளில் ஒரு மாபெரும் பிரளயமாக உருவெடுத்தன.

இராவணனின் அந்தப்புரக் கேளிக்கைகளுக்காக வனத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த ரத்தின மண்டபங்கள், செயற்கை அருவிகள், பளிங்கு மாடங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுத் தரைமட்டமாகின.

வனத்தின் கூரையாகப் படர்ந்திருந்த மரங்கள் சாய்ந்ததும், நள்ளிரவின் வானம் முழுமையாகத் திறந்துகொண்டது. பல மாதங்களாகச் சூரியனோ நிலவோ நுழைய முடியாதபடி இருண்டு கிடந்த அசோகவனம், இப்போது வானத்தின் நேரடிப் பார்வைக்குத் திறக்கப்பட்டு, நிர்வாணமாக ஒரு புயல்காற்றின் சீற்றத்தில் சிக்கியது போலச் சின்னாபின்னமாகியிருந்தது.

மிஞ்சி இருந்து மீண்டும் தடுக்க வந்த காவலர்கள் அனுமனின் சினத்திற்கு இரையாகினர். அவர்களின் குருதி அந்த வனத்தின் மண்ணை நனைத்துச் செக்கராக மாற்றியிருந்தது. அசோகவனம் இப்போது ஒரு மாபெரும் போர்க்களமாக, அழிவின் பிழம்பாக மாறியிருந்தது.

அது இராவணன் சபையில் எதிரொலித்தது.

“அரசே.. அ…. அ… அரசே” என்று தயங்கித் தயங்கி நின்ற ஒற்றர் தலைவனைக் கண்டதும், இராவணனின் கூரிய அறிவு நடந்ததைப் புரிந்துகொண்டது.

“எவ்வளவு நாசம் செய்துள்ளது அந்த வானரம்? நுழைவுவாயில் கோட்டை சிதைக்கப்பட்டதா?” என்று மிகவும் நிதானமாகக் கேட்டான் இராவணன். அவன் கைகள் உடைவாளைத் தடவின. அவன் உதடுகளை அவ்வப்போது கடித்த விதம் ஒற்றர் தலைவனுக்குப் பேரச்சத்தை ஊட்டியது.

“அசோகவனம் பெரும்பாலும் நாசமாகிவிட்டது அரசே…”

என்ற செய்தி கேட்ட இராவணனின் கண்கள் கொடூரமாகச் சிவந்தன.

“நன்று நன்று.. நம் ஒற்றர்களின் திறமை மிகவும் நன்று. ஒரு சாதாரணக் குரங்கை வேவு பார்க்கும் திறனற்ற ஒற்றர் கூட்டத்தை வைத்துக்கொண்டு ஈரேழு உலகங்களையும் ஆளும் என் திறமை அதனினும் நன்று,” என்றான்.

மெதுவாகவும், அதே நேரத்தில் ஏளனமும் சினமும் தெறித்த அந்தக் குரல் சபையைக் கலங்கடித்தது.

“இறந்தவர்கள் எண்ணிக்கை எத்தனை?” என்றான் இராவணன். அந்த நேரத்திலும் நிதானம் தவறாது நடந்ததை ஊகித்தறியும் அவனின் மதியூகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

“வனக் காவலர்கள் பல ஆயிரம் பேர் இறந்துவிட்டனர் அரசே.. மேலும் படைத்தலைவர்கள் ஜம்புமாலி, துர்தரா உள்ளிட்டவர்களும் வீரமரணம் அடைந்தனர்.”

இராவணன் அமைதி காத்தான். உண்மையில் இலங்கைக்கு அழிவு வந்துவிட்டதா? கைலையில் சிவ தரிசனத்திற்குச் சென்றபோது நந்திதேவரை அவமதித்ததால், அவர் தந்த சாபம் நிறைவேறும் நாள் இதுவா என இராவணன் யோசிக்கத் தொடங்கினான். அவனை அறியாமல் தோல்வி குறித்த ஏதோ ஒரு மெல்லிய அச்சம் அவன் ஆழ்மனதில் படியத் தொடங்கியது.

ஒற்றர் தலைவன் தலைகுனிந்து தன் தோல்விக்காக மரணத்தை எதிர்பார்த்து நின்றிருந்தான். இராவணனின் கண்கள் பனியில் உறைந்தன போன்று எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அவனைப் பார்த்தன.

“இன்றுமுதல் நீ பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறாய் ஒற்றர் தலைவனே. இலங்கையின் எந்த ஓரிடத்திலும் உன் இருப்பை நான் அறியக் கூடாது,” என்றவனின் குரல் வெகு சாதாரணமாக இருந்தாலும், ஈட்டியைப் போல அவனது இதயத்தைத் தாக்கியது.

“தந்தையே, வனத்தில் குரங்குகளைக் கண்காணிக்க ஒற்றர் படையா? அவ்வளவு பலவீனமானதா நம் இலங்கை, அல்லது நாம் எப்போது குரங்குகளைக் கண்டு பயப்பட ஆரம்பித்தோம்?”

இராவணன் குரல் வந்த திசையை நோக்கினான். அக்‌ஷய குமாரன்! இளம்பிராயத்து இராவணனை நினைவில் காட்டும் உருவம்.

“மகனே அக்‌ஷயக் குமாரா, இது அச்சமல்ல, எச்சரிக்கை.”

“தந்தையே! ஒரு சாதாரணக் குரங்குக்கா இவ்வளவு எச்சரிக்கை? எனக்கு உத்தரவு கொடுங்கள். இக்கணமே சென்று அந்தக் குரங்கின் தலையைக் கொய்து உங்கள் காலடியில் வைக்கிறேன்!” என்றான் துடிப்புடன்.

தந்தையின் மாபெரும் நிழலில் வளர்ந்த எந்த ஒரு மகனுக்கும், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய ஒரு கட்டாய உளவியல் தவிப்பு இருக்கும். இராவணன் என்ற மாபெரும் ஆளுமையின் முன், தானும் ஒரு சிறந்த வீரன் என்று நிரூபிக்க அக்‌ஷயகுமாரனுக்கு ஒரு வாய்ப்புத் தேவைப்பட்டது.

அந்த வாய்ப்பாக அனுமனை அவன் நினைத்தான். இளமையின் துடிப்பும், தன் பலத்தின் மீதான அதீத நம்பிக்கையும் அவனை முட்டாள்தனமாக முந்திச் செல்ல வைத்தன.

இராவணன் கூட அந்த நேரத்தில் தன் அதீத எச்சரிக்கை அவசியமற்ற ஒன்றோ என எண்ணினான். ஒரு குரங்கால் அத்தனைப் படைவீரர்களைக் கொல்ல முடியும் என்ற நம்பிக்கை அவனிடம் தோன்றவில்லை.

“உண்மை மகனே, ஏதோ தேவர்களின் மாயம் உள்ளது போல் தோன்றுகிறது. நீ பொறுப்பேற்று என்ன நடந்தது என அறிந்து அந்தக் குரங்கை அழித்துவிட்டு வா.. தேவர்கள் இதைச் செய்திருந்தால்…” என்று நிறுத்திய இராவணனைப் பார்த்து,

“அவர்களைக் கூண்டோடு அழித்துவிடுவோம்!” என்றான் அக்‌ஷய குமாரன்.

இராவணன் தன் மகனின் வீரத்தைப் பார்த்துப் பெருமிதம் கொண்டான்.

பல்லாயிரம் தேர்களும், யானை குதிரைப் படைகளும் புடைசூழ, ஆகாயத்தை மறைக்கும் அம்புகளோடு அக்‌ஷயகுமாரன் அசோகவனத்தை அடைந்தான்.

அங்கே பேரழிவின் நடுவே, ஒரு மாபெரும் இடிபாட்டின் மீது கால்களை மடித்துக் கம்பீரமாக அமர்ந்திருந்தான் அனுமன்.

அக்‌ஷயகுமாரன் தன் தேரிலிருந்து சரமாரியாக அம்புகளை அனுமன் மீது தொடுத்தான். வானத்தை மறைத்து வந்த அந்த அம்புகளை, அனுமன் தன் கைகளாலேயே தட்டிப் பறித்தான்.

“நான் ஏழுலகை ஆளும் இராவணன் மகன். காட்டில் போர் செய்யும் பயிற்சி இல்லாமல் காவலுக்கு நின்ற வீரர்களைக் கொன்றுவிட்டு வீராப்பில் மார் தட்ட வேண்டாம். இதோ உன் அழிவு என் கையில்!” என பெருங்குரலோடு போரை உக்கிரமாக்கினான் அக்‌ஷயகுமாரன்.

மேகம் பொழிந்த மழைத்துளி போல, அக்‌ஷய குமாரன் எய்த அம்புகள் அனுமனின் மலையன்ன தோள்களில் பாய்ந்தன. அதிலிருந்து பெருகிய குருதி, செம்மண்ணில் பாயும் அருவியைப் போல அனுமனின் உடலில் வழிந்தோடியது.

போர் என்பது ஒரு மாபெரும் கலை. எதிரியின் வலிமையைக் குறைத்து மதிப்பிடும் யாரும் வெல்ல முடியாது. தன்னை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் போரிட வந்த அக்‌ஷயகுமாரனை அவன் உடனே கொல்லவில்லை.

அவனது படைச் செருக்கை, அவனது ஆயுதங்களை, அவனது தேரின் வலிமையை முதலில் சுக்குநூறாக்கினான். அக்‌ஷயகுமாரனின் தேர்க் குதிரைகள் அனுமனின் ஒற்றை அறைக்குத் தரைமட்டமாகின. அவனது வில் முறிந்தது.

ஆயுதங்களை இழந்த அக்‌ஷயகுமாரன், கோபத்தின் உச்சியில் தன் கதாயுதத்தை எடுத்துக்கொண்டு அனுமனை நோக்கிப் பாய்ந்தான்.

அனுமன், அந்தரத்தில் பாய்ந்து வந்த அக்ஷயகுமாரனின் கழுத்தைப் பிடித்துத் தூக்கினான். ஒரு கணம் அந்தச் சிறுவனின் கண்களில் மரணத்தின் அச்சம் சிறிதுமின்றி வீரம் பெரிதும் உறைவதைக் கண்டான்.

அனுமனின் மனம் லேசாக சஞ்சலத்துக்குள்ளானது. இளம்பிராயத்தில் இருக்கும் சிறுவன்; அவன் கண்களில் தெரிந்த அந்த வீரமும் அச்சமின்மையும் அவனை ஒரு கணமேனும் நிதானிக்கச் செய்தது. ஆனால் இராவணனைத் தூண்ட இவன் அழிவது அவசியம் என்பதை உணர்ந்தான்.

“மன்னித்துக் கொள் இளம் வீரனே, உன் வீரம் மெச்சத்தக்கது. ஆனால் உன் மரணத்தின் தேவை தவிர்க்க இயலாதது. எனவே… ” என்று தன் வார்த்தைகளை முடிக்காமல், யானை ஒன்று மரக்கிளையைப் பற்றிச் சுழற்றுவது போல, அக்‌ஷயகுமாரனை இரு கைகளால் சுழற்றி, பூமியின் மீது ஈவிரக்கமின்றி ஓங்கி அடித்தான்.

அந்த வேகத்தில் அக்‌ஷய குமாரனின் எலும்புகள் நொறுங்கிச் சிதைந்து, அந்த இலங்கையின் மண்ணோடு மண்ணாக அக்ஷயகுமாரன் அரைபட்டு மாண்டான்.

இது தான் அக்‌ஷய குமாரன் என்று அடையாளம் காட்டக் கூட ஏதுமில்லாமல், நிலமே அம்மியாக, உடல் குழவியாகக் கொண்டு அனுமன் அக்‌ஷய குமாரனைத் தரையோடு தரையாக அரைத்து விட்டிருந்தான்.

செய்தி இராவணனின் செவிகளை அடைந்தபோது, அந்த மாபெரும் சபையில் பாழ்வெளியின் ஓசையற்ற நிலை நிலவியது.

இராவணனின் நெஞ்சில் ஒரு மாபெரும் இடி இறங்கியது. அண்டங்கள் அனைத்தையும் நடுங்க வைத்த அந்த கண்களில், அதுவரை உலகம் பார்த்திராத ஒரு புதிய திரவம் சூடாக துளிர்த்தது. அது கண்ணீர். வலி என்பது ஏழைகளுக்கும் சாமான்யர்களுக்கும் என்றில்லாமல், அது பேரரசர்களுக்கும் பொதுவானதுதான் என்பதை, காலம் எப்போதும் உணர்த்தத் தவறியதில்லை.

இராவணன் அலறவில்லை; மார்பில் அடித்துக் கொள்ளவில்லை. ஆனால், அவனது நெஞ்சுக்கூட்டிற்குள் ஒரு பெரும் எரிமலை வெடித்தது. மகன் இறந்த துயரத்தை விட, ஒரு குரங்கால் தன் ரத்தம் சிந்தப்பட்டுவிட்டதே என்ற அவமானம் அவனது மூளையைப் பித்தழிக்கச் செய்தது.

அவனது கோபம் அக்னியாகக் கொழுந்துவிட்டு எரிந்தது. அவன் ஆழ்மன அச்சம் மெதுமெதுவாக இன்னும் ஆழ்ந்து வேரூன்றத் தொடங்கியது.

“நானே செல்கிறேன்! அந்தக் குரங்கை என் கைகளால் சுக்குநூறாகக் கிழித்தெறிகிறேன்!” என்று கர்ஜித்தபடி, இராவணன் தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து தன் மாபெரும் வாளை உருவினான்.

அப்போது சபையின் முன்வரிசையிலிருந்து ஒருவன் குறுக்கே வந்து நின்றான்.

அவனது முகத்தில் எவ்வித உணர்ச்சியும் அற்று, முற்றிலும் உறைந்த நீரில் சலனமற்ற நிலையே அவனது கண்களில் குடியிருந்தது. எரிமலையின் மீது படிந்து கிடக்கும் பனியினைப் போல அவன் முகம் காட்சியளித்தது.

ஒரு சிறந்த வீரனின் அழுகை என்பது கண்ணீராக மாறாமல், அது குருதி குடிக்கும் மிருகத்தின் குரூர வெறியாகவும், பழிவாங்கும் ஆவேசமாகவும் உருமாறிவிடும். அந்த வீரன் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவனாக இருந்தால், அது எரிமலையின் வயிற்றில் கனன்று கொண்டிருக்கும் நெருப்புக் குழம்பாகக் கொதித்துக் கொண்டே இருக்கும்.

அப்படித் தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு கம்பீரமாக முன்னே வந்த அவன் இராவணனின் மூத்த மகன்; போர்க்கலையில் ஈடிணையற்றவன். இந்திரனையே வென்று ‘இந்திரஜித்’ எனப் பெயர் கொண்டவன். அவன் இடிமுழக்கம் போன்ற குரல் கேட்டு எதிரிகள் அச்சத்திலேயே ஓடி ஒளிந்துவிடுவார்கள்; அதனால் ‘மேகநாதன்’ என்ற பெயரையும் கொண்டவன்.

“தந்தையே, பொறுங்கள்!” என்றான் மேகநாதன் மிக நிதானமான குரலில்.

“ஒரு அரசன் தன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகக் கூடாது. ஒரு ஒற்றனுக்காக, அதுவும் ஒரு குரங்கிற்காக இந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி களமிறங்குவது நமது பலவீனத்தை நாமே ஒப்புக்கொள்வது போலாகும். அது எதிரிக்கு நாம் அளிக்கும் மாபெரும் வெற்றி. உங்கள் சிம்மாசனத்தின் மாண்பை ஒரு குரங்கின் முன் அடகு வைக்காதீர்கள். நீங்கள் அமருங்கள்; நான் செல்கிறேன். அந்த வானரத்தை உயிருடன் கட்டி இழுத்து வந்து உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்,” என்றான்.

இராவணன் மேகநாதனின் பேச்சில் இருந்த உண்மையைப் புரிந்துகொண்டான். உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

“மகனே மேகநாதா, நீ இந்திரனை வென்றவன். இந்த அழிவு குரங்கினால் வந்திருக்கும் என்று என்னால் எண்ண முடியவில்லை. இது இந்திரனின் மாயச் செயல் என்று நம்புகிறேன். நீ சென்று அந்த மாயத்தை விலக்கி அந்தக் குரங்கை உயிருடன் கொண்டுவா!” என்றான் இராவணன்.

அவன் கண்களில் ஏழுலகையும் அழிக்கும் சினம் நிறைந்திருந்தது.

(தொடரும்)

அசுரவதம்

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி

Author

You may also like

Leave a Comment