- அசுரவதம் -1 முதல் சந்திப்பு
- அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
- அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்
- அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்
- அசுரவதம் : 5 – புதுவரவு
- அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி
- அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை
- அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.
- அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.
- அசுரவதம்: 10 – பழியின் பயணம்.
- அசுரவதம்: 11 – நெடிது நின்ற நாயகன்.
- அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு
- அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்
- அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!
- அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்
- அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்குவா
- அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்
- அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
- அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.
- அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்
- அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.
- அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)
- அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 – இரு மகளிர் .. இரு சிந்தனை.
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17: நீறு பூத்த நெருப்பு
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்
- அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6: உடையும் அரண்கள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 9: படபடத்த பட்டாம்பூச்சி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 8: மாயைக் குகைகள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: ஒளியின் தவிப்பு!
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 11: தாய்க்கு ஒரு தாலாட்டு
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 13: நிலமே அம்மியாக, உடல் குழவியாக
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 14: காற்றின் போர்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 15: அட இராவணா
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 16: அணக்க நகரம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 17: பகை மூட்டிய புகை
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 18: கருணையின் ஊற்று
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 19: புனரபி ஜனனம், புனரபி மரணம்..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 20: சஞ்சலத் தீ
- அசுரவதம் – பாகம் 4: அத்தியாயம் 1: கண்டேன் சீதையை
பிரஸ்ரவண மலையின் அந்தி மாலையின் பொன்னொளி அந்தப் பிராந்தியத்தை ரம்மியமாக மாற்ற முயன்று தோல்வியடைந்திருந்தது.
உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு முகத்தில் எந்தச் சலனத்தையும் வெளிப்படுத்தாமல் அமர்ந்திருந்தான் இலக்குவன். அவன் மடியில் சக்கரவர்த்தித் திருமகனான இராமன் படுத்திருந்தான். இராமனையும் காலம் விடவில்லை.
காலம் என்பது மானுட விதிகளைக் கடந்து, எந்த ஒரு முக்கிய நியதிக்கும் அப்பாற்பட்ட ஒரு பெருநதி. அதன் ஆழத்தில், அலையடிக்கும் சுழல்களிலிருந்து எவரும் தப்ப முடிவதில்லை. இந்தப் பெருவெளியைத் தன் எண்ணத்தால் உருவாக்கிய அந்த ஆதிப் பரம்பொருளே ஆனாலும், தான் வகுத்த பேரண்டங்களின் விதிகளுக்கு முன்னால் தன்னை ஆட்படுத்திக்கொண்டு, ஒரு புள்ளியென நிற்கத்தான் செய்கிறான்.
இந்த மானுட வாழ்வின் அத்தனை இன்பங்களுக்கும், துயரங்களுக்கும், வீழ்ச்சிகளுக்கும், எழுச்சிகளுக்கும் பின்னணியில் இருக்கும் அந்தப் பெரும்விசைக்குத்தான் நம் முன்னோர்கள் ‘விதி’ என்று பெயரிட்டனர். அதுதான் அறத்தின் மாறாத அச்சு; மீற முடியாத காலத்தின் ஒழுங்கு.
அந்த விதியின் கரங்கள் இராமனையும் விடவில்லை. இராமனின் கண்கள் உறங்குவதைப் போல மூடிக்கிடந்தன. ஆனால் இலக்குவன்?
உறங்குதல் என்பதை அவன் கண்கள் மறந்து பதின்மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. பதினான்கைத் தொட இன்னும் சில மாதங்களே இருக்கின்றன.
உறக்கம் என்பது, மனித மனம் தன் செருக்கைத் துறந்து தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஓர் உயிரின் சிலிர்ப்பு; மனதின் பேரமைதி; உடலும் மனமும் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இறைவன் அளித்த கொடை.
இலக்குவனின் இமைகள் கானகம் வந்த இத்தனை ஆண்டுகளில் தங்களுக்குள் சந்தித்துக்கொண்டதில்லை. அவன் கண்கள் இப்போதும் இமைக்க மறந்து இராமனையே பார்த்துக்கொண்டிருந்தன.
“இலக்குவா… சீதை… சீ… தை…”
இராமனின் உதடுகள் மெல்ல மெல்ல உச்சரிக்கும் சொற்களின் அடர்த்தியும் ஓசையும் குறையத் தொடங்கிவிட்டன.
இலக்குவன் இராமனின் முகத்தைப் பார்க்கப் பார்க்க நெஞ்சம் உடையத் தொடங்கினான். அயோத்தியில் இராமனுக்கு நாளை முடிசூட்டும் விழா என்று அறிவித்த அந்த நாளின் இரவில், இராமனுக்காகத் தான் அச்சப்பட்ட அந்தக் கணம் இன்று உண்மையானதோ என்று அஞ்சினான். அவன் எண்ணங்கள் பின்னோக்கிச் சுழன்றன.
அன்று விடிந்தால் இராமன் இரகுவம்சத்தின் ஈடற்ற சக்கரவர்த்தியாகிவிடுவான். அந்த நினைவில் இலக்குவன் அளவற்ற மகிழ்வில் உறக்கம் மறந்திருந்தான். இரவின் இருள் பிரிய இன்னும் சில நாழிகைகள் இருந்த அந்த நேரத்தில், மகிழ்வையும் மீறி அவன் உள்ளுணர்வு இராமனுக்கு ஏதோ தீங்கு நடக்கிறது என எச்சரித்துக்கொண்டே இருந்தது. அவன் இருந்த மாளிகையின் இரண்டாம் தளத்திலிருந்து தசரதனும் கைகேயியும் இருந்த அரண்மனையை உற்று நோக்கினான்.
காற்றில் மிதந்து வந்த ஒலிகளைப் பிரித்தறிய முயன்றான். அரண்மனைப் பக்கத்திலிருந்து கேட்ட ஓசைகளில் வழக்கத்திற்கு மாறான ஏதோ ஒன்று அவனுக்குத் தட்டுப்பட்டது.
அங்கிருக்கும் அந்தப்புர விலங்குகள் அமைதியற்று இருப்பது போன்று தோன்றியது. குரு கௌசிகரின் ஆசிரமத்தில் தங்களைத் தாக்க அரக்கர்கள் வந்தபோது எழுந்த அதே எச்சரிக்கை உணர்வு இப்போதும் அவனுள் மேலோங்கியது.
இராமனுக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதாக உணர்ந்தான். இராமனைக் காக்க வேண்டிய நேரமிது என்று முடிவெடுத்தான். இரவில் நெடுநேரம் விழித்திருந்த கண்களின் இமைகள் கனத்தன. தன்னைத் தழுவ வந்த உறக்கத்தின் தேவதையைத் தடுத்து நிறுத்தினான்.
“உறக்கத்தின் அன்னையே! மானிடர் வாழ்வில் அன்றைய நாளின் அத்தனைச் செயல்களையும் மறக்கச் செய்து உறக்கத்தில் ஆழ்த்துபவளே! உன்னிடம் இந்த வரம் கேட்கிறேன். என் அண்ணன் இராமனை நான் இரவும் பகலும் காக்க வேண்டும். ஏதோ தீது நடக்கப்போவதாக உணர்கிறேன். என் அண்ணனைக் காண விரைகிறேன். நான் மீண்டும் இந்த மாளிகைக்குத் திரும்பும் வரை என்னை விட்டுவிடு,” என்று அவன் யாசித்தான்.
“மகனே! அப்படியானால் உன் உறக்கத்தைச் சுமப்பவர் யார்? உறக்கம் என்பது ஒருவருக்கான விதி. அதை நீ எப்படித் தவிர்ப்பாய்?” என்றாள் நித்திரா தேவி.
அப்போது, உறக்கமற்றுச் சிவந்த கண்களுடன் ஊர்மிளை தன்னறையிலிருந்து வெளியே வந்தாள். அவள் கைகள் இலக்குவன் தோளைத் தொட்டன.
“அன்னையே! அவர் என் உயிர்; நான் அவர் உடல். அந்த உறக்கத்தை…”
சொல்ல வந்ததை முடிக்காமல் அவள் கண்கள் இலக்குவனை நோக்கின. இலக்குவன் இராமன் மீது வைத்திருக்கும் அன்பும், அவன் கொண்ட கடமையும் உறுதியும் சிறுவயதிலிருந்தே ஏற்பட்டவை. ஆகவே, அந்த அன்பின் பிணைப்புக்கு எந்தக் களங்கமும் வராமல் இலக்குவனுடனான தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருந்தாள் ஊர்மிளை.
இன்று ஏற்பட இருக்கும் இடைவெளி நெடுங்காலம் தன்னைப் பிரித்திருக்கும் என்பதை ஊர்மிளையின் உள்ளுணர்வு எச்சரித்தது. அவள் கண்கள் கனிந்து அவனை நோக்கின. அங்கே மௌனத்தின் மொழியால் உண்டான அந்தக் காதலின் நிசப்தத்தைக் கலைத்தாள் நித்திரா தேவி.
“அப்படியானால்..?” என்றவளுக்கு,
“உயிர் விழித்திருக்கட்டும்!”
என்று தன் பார்வையைத் தாழ்த்தியபடி மீண்டும் அறைக்குள் சென்றாள் ஊர்மிளை.
அவள் உள்ளே செல்லும்போது ஒருமுறை அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்கள் ஏதோ சொல்ல முயன்று தோற்றது போல இருந்தது.
“உங்கள் கடமை இனித் தடைபடாதிருக்கட்டும் இளவரசே!” என்று சொல்லிவிட்டு அறையின் கதவை மூடினாள். இலக்குவன் திகைத்து நின்றான். அவளாக இலக்குவனின் துயரை வலிந்து சுமக்கத் தொடங்கியிருக்கிறாள். அது இலக்குவனை இன்னும் துயரத்தில் ஆழ்த்தியது.
ஊர்மிளைக்கு இப்போது தான் செய்திருப்பது காலத்தாலும் சரிசெய்ய முடியாத அக வன்முறை என்பதை இலக்குவனின் மனம் உணர்ந்து நொறுங்கியது.
இப்போது இராமனை மடியில் வைத்துக்கொண்டிருந்தாலும், அவன் உதடுகள் வேதனையுடன் இலேசாக, “ஊர்மிளை… என்னை மன்னிப்பாயா?” என்றது. இயலாமையினால் அவன் கண்கள் வறண்டு கிடந்தன. அவளை விட்டு நீங்கியிருக்கும் துயரம் ஒருபுறம், அண்ணன் நிலை மறுபுறம் என அவன் உள்ளம் திணற, ஒரு கணம் மூச்சடைத்தது போல விக்கித்தான்.
அந்த எண்ணச் சிதறல்களோடு சேர்ந்து இராமனைக் காப்பாற்ற என்ன செய்வது என்ற இயலாமையினால் உண்டான வெம்மை, இப்போது அவன் சிவந்த கண்களில் விழிப்பாக எரிந்துகொண்டிருந்தது.
இதுவரை இலக்குவனின் அந்தத் தீராத விழிப்பால் வெளியிலிருந்து வரும் அரக்கர்களை மட்டுமே தடுக்க முடிந்தது. உள்ளிருந்து இராமனை அரித்துக்கொண்டிருக்கும் அந்தத் துயரத்தின் இருளை அவனால் தீண்டக்கூட முடியவில்லை.
சுக்ரீவன் விதித்த ஒரு மாதக் காலக்கெடு முடிந்துவிட்டது. ‘சீதை இனி இல்லை’ என்ற எண்ணம் இராமனின் உயிரை மெல்ல மெல்ல அறுத்துக்கொண்டிருந்தது.
ஒரு மனிதனை வாழ வைப்பது வாழ்வின் மீதான நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை அறுபடும் புள்ளியில், உடல் தன் செயல்பாடுகளைத் தானாகவே நிறுத்திக்கொள்கிறது.
சீதை என்ற ஒற்றை வேரைப் பற்றிக்கொண்டு மானுட அறத்தில் நின்றிருந்த அந்தப் பெருமரம், இப்போது வேரற்றுச் சாயத் தொடங்கியிருந்தது. அவனது மூச்சுக்காற்று மிக மெல்லிய நூலிழையாக ஓடிக்கொண்டிருந்தது.
தூரத்திலிருந்து இந்தக் காட்சியைக் கண்ட அனுமனின் கண்கள் கண்ணீரால் நிரம்பிப் பார்வையை மறைத்தன. இராமன் இருக்கும் திசை நோக்கி நடந்தான். இராமன் உதடுகளிலிருந்து வரும் மெல்லிய சொற்கள் அவன் மனதை உலுக்கின. காலடி ஓசைகளைக் கேட்ட இலக்குவன் தன் நினைவுகளிலிருந்து மீண்டெழுந்தான். அவன் கண்ணெதிரே அனுமன் அருகில் வந்துகொண்டிருந்தான்.
“உன்னைக் காக்க முடியாமல் தோற்றுவிட்டேன் சீதை… என்னை மன்னித்துவிடு…” என்று இராமன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.
தன்னுயிர் பிரிவதைக் கண்டவன் போல இராமனைக் கண்ட அனுமனுக்கு நிலைமை புரிந்தது. அவன் இராமன் விரும்பிய நற்செய்தியைக் கொண்டு வந்திருக்கிறான். ஆனால், அதைக் கேட்கும் நிலையில் இராமன் இல்லை. அவனிடம் எப்படிக் கூறுவது?
‘சீதை…’ என்று அவன் பேசத் தொடங்கினால், அடுத்த வார்த்தைக்காகக் காத்திருக்கும் அந்த ஒரு சில நொடி இடைவெளியில், மனம் கற்பனை செய்யும் விபரீதங்களில் இராமனின் உயிர் பிரிந்துவிடக்கூடும்.
மனித மனம் எப்போதுமே நன்மையை விடத் தீமையையே முதலில் கற்பனை செய்யும் இயல்புடையது. மரணத்தின் விளிம்பில் இருப்பவனுக்கு விரிவான விளக்கங்கள் தேவையில்லை; அவனுக்குத் தேவை ஒற்றைச் சொல். அது இராமனின் மரணத்தை உடனடியாக நிறுத்தும் சஞ்சீவியாக இருக்க வேண்டும்.
அனுமன் இராமனின் காலடியில் மண்டியிட்டான்.
இராமன் கண்கள் வலிமையற்று அனுமனை நோக்கின. அனுமன் தன் உடலை நெடுஞ்சாண்கிடையாகத் தாழ்த்தித் தெற்கு நோக்கிப் பணிந்தபடியே, அந்த வார்த்தைகளை உச்சரித்தான்:
“கண்டேன்… கண்டேன்… சீதையை!”
அந்த வார்த்தைகள் இராமனின் உயிரை மீட்டெடுத்தன. அறுபட இருந்த மூச்சு சட்டென மீண்டும் சீரானது. ‘சீதையை’ என்ற சொல்லில் இராமன் தன்னிலை பெற்று மெல்ல இலக்குவனின் மடியிலிருந்து எழுந்து அமர்ந்தான்.
“அனுமா…” என்று குரல் தழுதழுக்க அனுமனை இரு கரங்களால் ஆரத்தழுவிக்கொண்டான். பல மாதங்களாக அந்த இடத்தில் உறைந்திருந்த இருள் ஒரு நொடியில் விலகி, அங்கே மாபெரும் உயிர்ப்பு துளிர்த்தது.
இலக்குவன் கண்கள் இப்போது புத்தொளி பெற்றது போல அவர்கள் இருவரையும் மகிழ்வுடன் நோக்கின. அனுமனை ஆரத்தழுவ அவன் கரங்கள் துடித்தன.
ஆனால், அனுமன் கம்பீரமாகக் காடதிர உச்சரித்த அந்தச் சொற்கள் இராமனை மட்டுமல்ல, இலக்குவனின் கண்காணிப்பு வட்டத்தைத் தாண்டித் தூரத்தில் இராமனைக் கண்காணித்துக்கொண்டிருந்த சிலர் காதுகளிலும் விழுந்தன.
அனுமனின் அந்தக் குரல் அந்த ஒற்றர்கள் மூலம் இலங்கையின் செல்விக்கும் எட்டியது.
சூர்ப்பனகை முகத்தில் வஞ்சத்தின் வன்மம் கூடிய புன்னகை ஒன்று உதித்தது.
“சீதை…”
அவள் கையில் விரல்களுக்கிடையே பொன்னாலான மதுக்கோப்பை நசுங்கியிருந்தது.
(தொடரும்)