Home கவிதைதிருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 11

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 11

0 comments
This entry is part 17 of 17 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்ஜாஃபர் பாஷா

பட்டினி இராஜ்ஜியத்தின் அதிபதிகள்

அதோ,
அவர்களே வலசைக் கூலிகள்
பட்டினி இராஜ்ஜியத்தின் அதிபதிகள்
முறிந்த இறக்கையோடு் முதுகோடு ஒண்டிய வயிற்றோடு
கேலி செய்கிற பசியை எதிர்த்துக்கொண்டு
சிதலமான நவசமூகத்தின் அடித்தளக் கற்களின் மேல்
காறி உமிழ்ந்து
நூறு மைல் தொலைவு இலக்கிற்காக நகர்ந்துகொண்டிருக்கும்
பயணம் அது

அந்த நடை ஒரு விடை கிடைக்காத கேள்வி
களைத்த தேகம், சலனமற்ற சதைத்துண்டம்
கண்ணிலிருந்து வழிகின்றனவே கண்ணீர்த் துளிகளல்ல
அவை இரத்த ஆறுகள்
அவர்கள் மரணித்த ஆத்மாக்களை சுமந்து செல்கின்ற
உயிருள்ள பிரயாணிகள்

ஆனாலும் நமக்கெதற்கென திடீரென்று கிடைத்த ஓய்வை
எப்படி வீணடிப்பதென்று நிதானமாக யோசிப்போம்

அவர்கள் வயிற்றை எரித்த கரிந்தவாசனை வராதபடிக்கு
சிறிது அத்தர் பூசிக்கொள்வோம்
மனிதர்களைப் போன்ற அந்தப் பிணங்கள் கடந்து செல்கிறபோது
கண் இமைகளுக்கு பூட்டு போடுவோம்
அவர்கள் கண்ணீர் நம்மை மூழ்கடிக்காதபடிக்கு
வானளவு அணைக்கட்டு எழுப்புவோம்
அவர்களின் ஆர்த்தனாதங்கள் கேட்கமுடியாதபடிக்கு
இன்னும் கொஞ்சம் “சத்தமாகக் கைதட்டுவோம்”

அப்புறம்
நொச்சரிக்கிற இரண்டு கேள்விகளுக்கு விடைதான் என்ன?
நெருப்பாற்றில் நீந்திக்கொண்டிருக்கும் அந்த வலசை வாழ்க்கைகளுக்கு
துடுப்பு கிடைப்பதெப்போது…?
கரை அடைவதெப்போது…?

திருவை மு.இரா. கவிதைகள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 10

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment