Home இதழ்கள்இதழ் 16திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 12

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 12

0 comments
This entry is part 18 of 18 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்ஜாபேர் பாஷா

இந்த உலகை வெல்வேன்

எதற்கோ? எதற்கோ?
தெரியாத கிறுக்கல் நடை ஒன்று
பாதையிடம் திட்டு வாங்கிக்கொண்டே
நகர்ந்துகொண்டிருக்கிறது.

கண் சுவரிலிருந்து
தூக்கம் சில்லு சில்லாகப் பெயர்ந்து விழுகிறதென்று
கணந்தோறும் எச்சரித்துக்கொண்டே இருக்கும்.

தலைசாய்த்து தூங்குவதற்கே தலையணை
இருக்கிறதென்று நினைப்பார்கள் எல்லோரும்!
உண்மையில் அது சொட்டுச் சொட்டாகப்
பெயர்ந்து விழுகிற சிதைந்த கனவுகளைப்
பத்திரமாகப் பதுக்கி வைக்கிற அலமாரி.

யதேச்சையாக ஏதும் நடக்காது
நடக்கிற சர்வ நாசங்களும் பிரக்ஞையிலேயே!
ஆனாலும் ஒரே ஒரு அதிசயத்துக்காக எதிர்நோக்கி
பாதி வாழ்க்கை சின்னாபின்னமாய் நலிந்து உறுத்தலாகி..

யாராக இருந்தாலும் எவ்வளவுதான் தாங்குவார்கள்
சோகத்தையோ சோகத்தோடு பாய்கிற வெள்ளத்தையோ
வலி தவிர வடிவில்லாத வேண்டா அனுபவங்களையோ?
யாராக இருந்தாலும் எவ்வளவுதான் தாங்குவார்கள்
சுமக்க முடிந்த வரை சுமந்து வெடித்துப் போவதைத் தவிர?

இருட்டில் துண்டு துண்டாய் நொறுங்கிப்போவது பழக்கம்
வெளிச்சத்தில் நொறுங்கிய துண்டங்களைப் பொறுக்குவது
தினசரி வழக்கம்
ஒவ்வொரு நாளும் இதே வாடிக்கை.
உடல் மரத்தை ஆக்கிரமித்த சோகப் புழுவை
விரட்டத் தெரியாத கையாலாகாத்தனம்!
அந்தக் கையாலாகாத்தனத்தின் கையில்
அடிமையாய் வாழ்கிற துயரமிகு இத்தருணம்.

நிர்வேதம், நிர்லிப்தம்,
நிஸ்தேஜம், நிஸ்ஸாரம்
இன்னும் எவ்வளவு காலம்?
தவிர்க்க இயலாது இனி மாறியாக வேண்டும்

காலத்தை மாற்றியாக வேண்டும்
உடனே எழுந்திருக்க வேண்டும்
ஓட்டம்பிடித்தாக வேண்டும்…
கண்களை வெறுமைக்கு அர்ப்பணித்து
மனதைக் கண்ணீர் முத்துகளில் மூழ்கடித்தது போதும் இனி!
அழுக்கடைந்த சட்டையைத் துவைத்தெறிவது போல்
உள்ளிருக்கும் களையைப் பிடுங்கி எறியும் நேரமிது.

ஏதாவது ஒரு கணம் என்னுடையதாகாமல் போகாது
என் பெயர் எழுதிய பலகையைக் காட்டியபடி
எனக்கான ஒரு நாள் என்னை வரவேற்காமல் போகாது.
இதோ அந்த நாள்!
இந்த உலகை வெல்வேன்
இந்த உலகை வெல்வேன்.

திருவை மு.இரா. கவிதைகள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 11

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment