Home இதழ்கள்இதழ் 17நல்லாச்சி – 44

முதற்சோறூட்டும் சடங்கிற்காய்
குழுமியிருக்கின்றனர் குடும்பத்தார் அனைவரும்
பிள்ளைக்குத் தான்தான் ஊட்டுவேனென
ஆளாளுக்குப் பதிகிறார்கள் நல்லாச்சியிடம்
தர்மசங்கடத்துடன் தலையசைக்கிறாள் அவளும்
பாரபட்சமின்றி

பாலமுதும் தேனமுதும் பாயசமும்
வெள்ளிக்கிண்ணங்களில் வீற்றிருக்க
மாலைகளும் குறுவேட்டியுமணிந்து
தண்டை சலசலக்கக் காலுதைக்கும் பாலகனுடன்
வழிபாடுகள் முடியக் காத்திருக்கின்றனர்
கூப்பிய கரங்களுக்குள்
பொதிந்த வேண்டுதல்களோடும்
முதல் மரியாதைக்கான எதிர்பார்ப்புகளோடும்

வீறிடத்தொடங்குகிறான் குழந்தை
எதற்கும் கட்டுப்படா அழுகைக்கு
ஆளாளுக்காய்க் காரணங்களைக் கண்டவர்கள்
மறக்காமல் ஒன்றிரண்டை
தாய்மேலும் சுமத்துகிறார்கள்
கையைப்பிசைகிறாள் நல்லாச்சி
கருத்துடன் தேனூட்டுகிறாள் பேத்தி
தேனமுது அடக்குகிறது
தெள்ளமுதின் அழுகையை
ஆசுவாசம் கொள்கின்றனர் அனைவரும்
பஞ்சாயத்திற்குப் பயந்த நல்லாச்சியும்தான்.

Author

You may also like

Leave a Comment